படிப்பில் முழு கவனம் செலுத்தும் வகையில், பள்ளி மாணவியர் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்க, பெற்றோர் முன்வரவேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவியர் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது; வகுப்பறையில் மொபைல் போன் வைத்திருந்தால், அவற்றை பறிமுதல் செய்ய, வகுப்பு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நலன் கருதி, சில மாவட்டங்களில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், சஸ்பெண்ட் செய்யவும், கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
விடலை பருவம் எனப்படும் டீன்-ஏஜ் வயதில், மாணவியர் கையில் இருக்கும் மொபைல் போன் என்பது, குழந்தையின் கையில் இருக்கும் தீப்பந்தம் போன்றது.
மொபைல் போனில் நிறைய தகவல்களை, உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்ற வசதி மட்டுமின்றி, ஆபாச காட்சிகளையும் காண முடியும். தவறான ஆண் சகவாசத்தையும் விரைவில் ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது.மொபைல் போன் "வாட்ஸ்-அப்&'பில் பரவும் ஆபாச படங்களை, புரியாத வயதில், ஆர்வக்கோளாறில் மாணவியர் பார்த்து, தவறான வழியில் செல்வதற்கு, அதிக வாய்ப்புள்ளது. தவறான ந(ண்)பர்களின் சகவாசத்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் ஆபத்து உள்ளது.
திருப்பூரில் உள்ள பள்ளிகளில், சில மாணவியர், ஆன்ட்ராய்டு போனை பயன்படுத்துகின்றனர். வகுப்பறையில், போனை ஸ்விட்ச்-ஆப் செய்துவிடும் அவர்கள், பள்ளி வளாகத்திலும், பஸ்களில் பயணிக்கும்போதும், மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். சில மாணவியருக்கு, அவர்களது பாய் பிரண்ட்ஸ் மூலமாக, இதுபோன்ற போன்கள் பரிசாக வழங்கப்படுகிறது. இவ்விவகாரத்தில், ஆசிரியர்களை காட்டிலும் மாணவியரின் பெற்றோரே, தீவிர கவனம் செலுத்த வேண்டும். மொபைல் போன் பயன்படுத்தும் மாணவி, மனம் தடுமாறினால் பள்ளியை பொருத்தவரை, மாணவியின் படிப்பு மட்டுமே கெட்டுப்போகும்.
ஆனால், பெற்றோர் கவனமின்றி இருந்து விட்டால், மகளின் எதிர்காலமே சிதைந்து போகும் ஆபத்துள்ளது. இதுகுறித்து, பெற்றோர், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். டீன் -ஏஜ் வயது மாணவியரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, பள்ளி நிர்வாகங்களும், இதுபற்றி ஆலோசனை கூட்டம் நடத்தி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment