சீட் அதிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ கல்லுாரியிடம் கூடுதல் எம்.பி.பி.எஸ்.,சீட்கள் பெறாமல் அரசு மவுனமாக உள்ளதால் இறுதி கட்ட கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில், அகில இந்திய பொறியியல் தொழில் நுட்ப கவுன்சிலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் கவுன்சிலிங் நடக்கும் தேதி ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது.
இதன்படி, எம்.பி.பி.எஸ்.,பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 25ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சிலிங்கும், ஜூலை 27ம் தேதிக்குள் 2ம் கட்ட கவுன்சிலிங், செப்டம்பர் 10ம் தேதிக்குள் 3ம் கட்ட கவுன்சிலிங், செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
பொறியியல் படிப்பை பொருத்தவரை ஜூன் 30ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதிக்குள் 2ம் கட்ட கவுன்சிலிங், ஜூலை 20ம் தேதிக்குள் 3ம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட் 15ம் தேதி இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
திணறல்
புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு இறுதி கட்ட கவுன்சிலிங் சென்டாக் நடத்தி முடித்து, இடம் கிடைத்த அனைத்து மாணவர்களும் கல்லுாரியில் சேர்ந்து விட்டனர்.
ஆனால், மருத்துவ படிப்பிற்கு இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்த முடியாமல் சென்டாக் திணறி வருகிறது. எஸ்.சி., பிரிவினர் பெற்ற தடை உத்தரவினால் ஏற்கனவே கவுன்சிலிங் தள்ளி போனது. தற்போது மாணவர்கள், பெற்றோர்களின் கூடுதல் சீட் கேட்டு துாக்கியுள்ள போர்க்கொடியால் நான்காம் கட்ட கவுன்சிலிங் ரத்து செய்யும் அளவிற்கு பூதாகரமாகி உள்ளது.
போராட ஆயத்தம்
சீட் அதிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ கல்லுாரியில் இருந்து கூடுதலாக இந்தாண்டு 34 சீட்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும் என, மிகப் பெரிய போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.ஆனால் தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகத்திடம் கூடுதல் சீட் பெற அழுத்தம் கொடுக்காமல் அரசு மவுனம் சாதித்து வருகிறது.இதனால் தனியார் மருத்துவ கல்லுாரியில் கூடுதல் எம்.பி.பி.எஸ்.,சீட்கள் பெற்று இறுதிகட்ட கவுன்சிலிங் நடத்தப்படுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.
சென்டாக் அதிகாரிகளிடம் கேட்ட போது 'அரசு மருத்துவ கல்லுாரி யில் 128 இடங்களுக்கு சென்டாக் கவுன்சிலிங் சேர்க்கை ஆணை வழங்கியது. இடம் கிடைத்த அனைத்து மாணவர் களும் கல்லுாரியில் சேர்ந்து விட்டனர்.அக்கல்லுாரியில் 22 எம்.பி.பி.எஸ்.,இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர் கள் நாளை 15 ம் தேதிக்குள் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர வேண்டும். இல்லையெனில் நிரப்பாத இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்கும்.
கடந்தாண்டு இதுபோன்று சில எம்.பி.பி.எஸ்., இடங்கள் வரை கிடைத்தன. இந்த இடங்கள் சென்டாக்கிற்கு ஒதுக்கியதும் 24ம் தேதி அல்லது அதற்கு பிறகு கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளோம். கூடுதல் எம்.பி.பி.எஸ்.,சீட் தொடர்பாக அரசு தான் தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment