ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி மாணவர்களுக்கு, தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் திட்டத்தில், பெரும் தொகையை கமிஷனாக பெறுவதற்காக, அதிகாரிகள் கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.கடந்த, ஆக., 27ம் தேதி, தமிழக சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், '1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும், 98 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்படும்' என, தெரிவித்தார்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, 1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், 98 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில், மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிட, அவரவர் வீட்டில் இருந்து, தட்டு மற்றும் டம்ளர் எடுத்து வர வேண்டும்.
சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் கொண்டு வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், அலுமினிய தட்டு எடுத்து வருகின்றனர். இது, மாணவ, மாணவியர் இடையே, ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.
இந்நிலையை மாற்றவும், மாணவ, மாணவியர் இடையே, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அவர்களுக்கு அரசு சார்பில், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த திட்டம் வரவேற்க தக்கதே, ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிக அதிகம். 'இத்திட்டத்திற்கு, 1.46 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், ஒரு தட்டு மற்றும் டம்ளர் விலை, 149 ரூபாயாகிறது. ஆனால், அதிகபட்சமாக, 100 ரூபாய்க்கே, நல்ல தட்டு மற்றும் டம்ளர் வாங்க முடியும். மொத்தமாக வாங்கும்போது, மேலும் விலை குறையும்.
அதிகாரிகள் தங்கள் சுய நலத்திற்காக, அதிக நிதிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளனர். இது, முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாணவ, மாணவியர் பெயரில், பெரும் தொகை சுரண்டப்பட வாய்ப்புள்ளது. எனவே, முதல்வர் நேரடியாக தலையிட்டு, இத்திட்டத்தில் முறைகேடு ஏற்படாமலிருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment