வயது முதிர்வடையும்போது ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் எலும்பு வலுவிழந்து, மெலியத் தொடங்குவதற்கு முக்கிய இடம் உள்ளது. இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க, தினந்தோறும் இரண்டு நிமிடங்கள் நொண்டி விளையாடினால் போதும் என சமீபத்திய ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் லோக்போரோவ் பல்கலைக்கழகத்தில் சரா ஆலிசன் தலைமையிலான ஆய்வுக் குழு 65 முதல் 80 வயதுக்குட்பட்ட முப்பத்து நான்கு ஆண்களிடம், தினந்தோறும் கால்களுக்கான உடற்பயிற்சியை ஓராண்டுக்கு மேற்கொள்ளச் சொன்னது. இந்தக் காலகட்டத்தில் உணவு உட்கொள்ளும் முறையிலோ, வேறு உடற்பயிற்சிகளோ எதையும் புதிதாக முயற்சிக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இதை தொடங்குவதற்கு முன்னும், பின்னும் அவர்களது உடலை சி.டி. ஸ்கேன் செய்தனர். இதன் முடிவின்படி ஓராண்டுக்குப் பின் உடற்பயிற்சி எலும்பை வலுவாக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. குதித்தல் (நொண்டி விளையாட்டு) போன்ற குறைந்தபட்ச உடற்பயிற்சியை இரண்டு நிமிடத்துக்கு தினந்தோறும் செய்வது இவ்வளவு வேகமான நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த ஆய்வுக் குழுவினர்.
மூப்பின்போது ஏராளமானோர் இடுப்பெலும்பு உடைந்து, நடக்க முடியாமல், படுத்த படுக்கையில் சோகத்திலேயே இறந்தும் போய்விடுகின்றனர். எனவே, முடிந்தவரை இதுபோன்ற உடற்பயிற்சிகளைச் செய்வது கால்களுக்கு மட்டுமின்றி இடுப்பு எலும்புக்கும் வலு சேர்க்கும். இதனால் நிறைய பாதிப்புக்கள் தவிர்க்கப்படலாம்.
No comments:
Post a Comment