தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் பேசியது:
தமிழகத்தில் மிகச் சிறந்த திட்டமாக, விலையில்லாத மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை மொத்தம் 33 லட்சத்து 19 ஆயிரத்து 866 கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அதில், 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 வழங்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு, ஐந்தாம் கட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 லட்சம் மடிக்கணினிகள், டிசம்பருக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 10,034 இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 345, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வழியாக 333, முதன்மை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 4,541, கிராமப்புற வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 4,167, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வழியாக 171, கிராமப்புற ஆர்வலர்கள் மூலம் 477 என மொத்தம் 10,034 இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டலம்: தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 1,322.25 ஏக்கர் நிலம் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-14 ஆண்டில் மொத்தமுள்ள எட்டு மண்டலங்களில் 32 தகவல் தொழில்நுட்பம்- அதுசார்ந்த நிறுவனங்களில், 38,000 பேர் நேரடியாகவும், 76,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அதன் எண்ணிக்கை 54 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது என்றார் சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment