ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் பருவம் செப்டம்பர் மாதத்தோடு நிறைவடையும் நிலையில், இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
இரண்டாம் பருவத்துக்கு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மொத்தம் 2.15 கோடி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 1.33 கோடி புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 67 மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்தப் புத்தகங்கள் செப்டம்பர் 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
அத்துடன், இரண்டாம் பருவத்துக்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப் புத்தகங்களும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.தனியார் பள்ளி மாணவர்கள்: தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 82 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment