தஞ்சை லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு மையத்தில், ஓட்டு இயந்திரத்தில் உள்ள சீல் உடைக்கப்படவில்லை. இயந்திரம் வைக்கப்படும் பெட்டிக்கு மேலுள்ள சீல் தான், மண்டல தேர்தல் அலுவலரால் உடைக்கப்பட்டுள்ளது, என, தஞ்சை கலெக்டர் சுப்பையன் கூறினார்.
தஞ்சை லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தல் கடந்த, நேற்று முன்தினம் (24ம் தேதி) நடந்தது. தஞ்சையை அடுத்த, நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மறியல் கிராமத்தில், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில் அருகருகே, ஐந்து ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு, ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ள பெட்டிக்கு அலுவலர்கள், "சீல்' வைத்தனர். 17 சி பார்ம் வழங்கப்பட்டு, ஓட்டுப்பதிவு விபரமும் அதில் குறிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 8.30 மணியளவில் அங்கு வந்த மண்டல தேர்தல் அலுவலர் மணிகண்டன், பெட்டியின் மேல் வைத்த, சீலை உடைத்தார் என, தி.மு.க., பூத் முகவர்கள் சர்ச்சையை கிளப்பினர். சம்பவம் அறிந்து, தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க.,வினர் மையத்துக்கு வந்தனர். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த டி.ஆர்.பாலுவை வெளியே செல்லுமாறு, வல்லம் டி.எஸ்.பி., சுகுமாரன் கூறினார். அவரிடம், "நீ போலீசா எனத் தெரியாது. தொப்பி போடவில்லை. முதலில், தொப்பி போட்டு விட்டு வா; வேட்பாளரை வெளியே போகச் சொல்ல உனக்கு அதிகாரமில்லை' என, ஒருமையில் பேசி வேட்பாளர் பாலு விரட்டியடித்தார். மேலும், மண்டல தேர்தல் அலுவலர் மணிகண்டனிடம், "ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மேலுள்ள சீல் பகுதியை, நான் தான் உடைத்தேன்' என, எழுதி வாங்கி சென்றனர். தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தேர்தல் அலுவலர், அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென,தி.மு.க. வேட்பாளர் வலியுறுத்தினார். தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்பையன் கூறியதாவது: தஞ்சையில், மறியல் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரத்தில், ஒரு சீல் வைத்து, அதை பெட்டியில் வைத்து, அதற்கு மேல் நூல் கட்டி, மற்றொரு சீலை அலுவலர்கள் வைத்துள்ளனர்.
எவ்வளவு ஓட்டு பதிவானது என, தெரிந்து கொண்டு தான், பெட்டிக்கு சீல் வைக்க வேண்டும்.
அதனால் தான், மண்டல தேர்தல் அலுவலர் மணிகண்டன், பெட்டியில் சீலை உடைத்துள்ளார். இதில், அவர் தவறு செய்யவில்லை. இதுவும், மண்டல தேர்தல் அலுவலருக்கு உரிய பணிகளில் ஒன்று. அதனால், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வாய்ப்பில்லை. மேலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சீல் அப்படியே உள்ளது. அதனால், மறு தேர்தலுக்கும் சாத்தியமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment