அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்த உடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான ஷிவ்தாஸ் மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதிரடி நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக நிதி நிலைமையை ஓரளவு சரி செய்தார்.
நேற்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து கணக்கு, இன்சூரன்ஸ் செய்திருந்தால் அதன் விவரம், வங்கி, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் அதைப்பற்றிய முழு விவரம், சேமநலநிதி பற்றிய விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாகம் அனுப்பி உள்ள சொத்து விவர சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் வேறு எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment