மக்களவை தேர்தலில் பணியாற்றிய, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில், மக்களவை தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதும், பள்ளி ஆசிரியர்கள், சமூக நலத்துறை ஊழியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் உள்பட, சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாக்காளர் அடையாள அட்டைக் கோரி விண்ணப்பிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்துவது, வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்வது, வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்குவது உள்ளிட்ட பணிகளை சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் ஆகியோர் செய்தனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் கடந்த 3 மாதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, தேர்தல் ஆணையம் இவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கும். ஆனால், இந்த தேர்தலில் ஆணையம் இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தேர்தல் வாக்கு பதிவு நாளில் வாக்கு பதிவு மையங்களில் பணியாற்றியதற்கும், இதுவரை ஊதியம் வழங்கவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து சத்துணவு அமைப்பாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே, நாங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். ஊதியம் தொடர்பாக, அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தோம்.
ஆனால், இதுவரை எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில், தேர்தல் பணியின்போது வழங்கப்படும் ஊதியமும் இந்த முறை கிடைக்கவில்லை. ஆசிரியர்களை விட, நாங்கள் அதிக நேரம் தேர்தல் பணியில் ஈடுபடுகிறோம். தேர்தலுக்கு முன் பணி செய்த நாளுக்கு தனியாகவும், வாக்கு பதிவு தினத்தன்று பணி செய்வதற்கு தனியாகவும் எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் செய்த பணிக்கே இன்னும் ஊதியம் வழங்கவில்லை. இந்நிலையில், வாக்கு பதிவு நாளில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் இதுவரை ஊதியம் வழங்காமல் உள்ளனர். ஆனால், பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் அன்றைய தினமே ஊதியம் வழங்கிவிட்டனர். வழக்கமாக எங்களுக்கும் உடனுக்குடன் ஊதியம் வழங்குவார்கள்.
ஆனால், இந்த முறை தேர்தல் முடிந்து பல நாட்களாகியும் ஊதியம் வழங்கவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். ஏற்கனவே, அதிக பணிச்சுமையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் இந்த அலட்சியம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.
No comments:
Post a Comment