தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொழிலா ளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் (தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) தேர்தல் நாளான இன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
ஏற்கனவே இத்தகவல் ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அமைப்புகள் விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும் அளிப்பதாக தொழிலாளர் துறைக்கு புகார் வந்துள்ளது. ஆகையால், மேற்கூறிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு இன்று கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment