விழுப்புரம் அருகே உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், ஒரே நேரத்தில் நூறு விதமான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி உலக சாதனை நிறுவனம் சார்பில் பரிசு பெற்றனர்.
பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடுவதை தடுக்கவும், பள்ளிக்கு செல்லாத சிறுவர் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அறிவை புகட்டவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், அண்டராயநல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட மற்றும் பள்ளிக்குச் செல்லாத 150 சிறுமிகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கல்வியுடன் கைத்தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பள்ளிகளில் பயிலும் 100 மாணவிகள் ஒரே நேரத்தில் நூறுவிதமான சாதனைகளை நிகழ்த்திக் காட்டும் நிகழ்ச்சி திருவெண்ணைநல்லூரில் நடைபெற்றது. இதில், 30 மாணவிகள் பத்மாசனம், புஜங்காசனம், கருடாசனம் உள்ளிட்ட 30 வகையான ஆசனங்களை செய்துகாண்பித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 6-ம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மாணவி, தலைமுடியாலும், திவ்யா என்ற சிறுமி கைவிரலாலும் ஆட்டோவை இழுத்து சாதனை நிகழ்த்தினர். 7-ம் வகுப்பு மாணவி சந்தியா, 3 நிமிடங்களில் 351 முறை இடைவிடாமல் ஏப்பம்விட்டும், சரிதா என்ற மாணவி ஒரு நிமிடத்தில் 187 முறை ஒரு கையால் ஓசை எழுப்பியும் சாதனைகளை நிகழ்த்தினர். மேலும் கைகளைக் கொண்டு ஸ்கிப்பிங் ஆடுவது, வண்ண காகிதங்களை கொண்டு கப்பல், வீடு, பூ, ராக்கெட் உள்ளிட்ட 13 வகையான பொருட்களை செய்து காண்பிப்பது என 100 விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த மாணவிகளுக்கு Assist Word Record நிறுவனம் சார்பில் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment