அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்கள் கிராமப்புற அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்து ,தொடர்ந்து மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்கவும் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர்.
அதிகரித்து வரும் தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அவ்வாறு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதைத் தடுக்க தமிழக அரசு சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள், காலனிகள், சைக்கிள்கள், மடிக் கணினி, உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்களை மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் எடுத்துக் கூறி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திட அனைத்து அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், 2014-15ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் நேரடியாக கிராமப்புறங்களிலுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு முறையே 5, 8, 10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளிலேயே சேர்த்திட மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுறுத்துகின்றனர். அப்போது மாணவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும், அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த காலங்களில் பெற்றுள்ள சாதனைகளையும் எடுத்துக் கூறுகின்றனர்.
இதன்படி, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அந்தப் பள்ளி தலைமையாசிரியர் மு.ஆ.உதயகுமார் தலைமையில் ஆசிரியர்கள் சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களிலுள்ள 22 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் உதயகுமார் கூறியது: சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதைக் கட்டுப்படுத்தி, அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நேரடியாக பெற்றோரை சந்தித்து வலியுறுத்துகிறோம். மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்க்க எங்கள் பள்ளியின் சிறப்புகளையும், கற்றல் கற்பித்தல் முறையில் மேற்கொண்டு வரும் புதிய உத்திகளையும் எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment