கேம்பஸ் பணி வாய்ப்பு என்பது அனைத்து மாணவர்களாலும் விரும்பப்படக்கூடிய ஒன்று. அந்த வகையில் ஒரு எம்.பி.ஏ., மாணவர் கேம்பஸ் பணி வாய்ப்பை பெறுவதை பெரிதும் விரும்புவார். அதைப் பெறுவதற்கு தன்னால் இயன்றளவு முயற்சி செய்வார்.
அதேசமயம், சில மாணவர்கள், அதிக சம்பளம் மற்றும் தாங்கள் விரும்பும் இடத்தில் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக, கேம்பஸ் வாய்ப்புகளை உதறுவதும் உண்டு. ஆனால், அந்த தவறை செய்யக்கூடாது என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கேம்பஸ் பணி வாய்ப்பு என்று பார்க்கையில், அது அனைவருக்குமே கிடைத்து விடுவதில்லை. எனவே, பணிகளைப் பெறுவதற்கான வேறு வாய்ப்புகளையும் ஒருவர் யோசிக்க வேண்டியுள்ளது. முதலில், ஒருவர் தான் பணி செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் அவற்றில் தற்போது எந்தெந்த நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை எடுக்கின்றன ஆகியவற்றின் பெயர்கள் அடங்கியப் பட்டியலை தயார்செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவும். புதிதாகப் படிப்பை முடித்த ஒருவர் தனது பணியைத் தொடங்குவதற்கான சிறந்த இடம் எதுவெனில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள்தான்.
எனவே, ஒருவர், தான் வசிக்கும் பகுதி அல்லது அதன் அருகாமையிலுள்ள புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்களை சேகரித்து, அங்கே நேரடியாக சென்று பணியைப் பெற முயல வேண்டும். பல புதிய நிறுவனங்களில், பொதுவாக, தேவையான மேலாண்மை பணியாளர்களின் பற்றாக்குறை இருக்கும். எனவே, நீங்கள் அங்கே தேவையான முன்தயாரிப்போடு சென்றால், பணி வாய்ப்பை எளிதாகப் பெறலாம்.
மேலும், உங்களுடன் படித்தவர்கள், ஏதேனும் புதிய நிறுவனத்தில் பணி செய்தால், உங்களுக்கு சிபாரிசு செய்யுமாறு கேளுங்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்களும் மறுக்க மாட்டார்கள். மேலும், உங்கள் கல்லூரியில் படித்த பழைய மாணவர்களிடமும் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் பணி வாய்ப்புகளை பெறும் விஷயத்தில் உங்களுக்கு உதவுவார்கள்.
உங்களின் துறை தொடர்பான, கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். அத்தகைய நிகழ்வுகளுக்கு வரும் நிபுணர்களிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் சில புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேளுங்கள்.
பின்னாட்களில், அவர்களைத் தொடர்புகொண்டு, பணி வாய்ப்புகள் சம்பந்தமாக உதவி கேட்கும்போது, அவர்களில் பலர், உங்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். மேலும், Naukri, Monster, Firstjobs, LinedIn jobs போன்ற பணி வாய்ப்புகள் தொடர்பான தளங்களுக்கு சென்றும், நமக்கான வாய்ப்புகளை அலசலாம்.
ஒரு மேலாண்மை மாணவரின் நேர்முகத் தேர்வு அனுபவம்
எம்.பி.ஏ., படிப்பின் இரண்டாம் ஆண்டின் பின்பாதியில், பிளேஸ்மென்ட் நடைமுறைகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் வகுப்பைப் பற்றி சிந்திப்பதைவிட, பணி வாய்ப்பைப் பற்றிதான் அதிகம் சிந்திப்போம்.
பிளேஸ்மென்ட் வாரம்(week) என்பது மனநெருக்கடி மிகுந்ததாய் இருக்கும். ஏனெனில், நேர்முகத் தேர்வுகள் நாள் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். நிறுவனங்கள், எக்சிகியூடிவ் பயிற்சி பெறுபவர்(executive trainee) முதல் மேம்பாட்டு மேலாளர் என்பது வரை பலவிதமான பணி நிலைகளுக்கான ஆட்களை தேர்வு செய்கின்றன.
நான் நேர்முகத் தேர்வின் பல நிலைகளைக் கடந்து சென்றேன். டெக்னிக்கல் சுற்றில், எனது துறை அறிவைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு சோதிக்கப்பட்டேன். மனிதவள அலுவலர்(HR) சுற்றில் தகவல்தொடர்பு திறன் குறித்து சோதிக்கப்பட்டேன். அந்த சுற்றானது, நமது திறன்கள், அந்த நிறுவனத்தின் மதிப்பிற்கு உகந்ததா என்பது குறித்து சோதிப்பதாக இருந்தது.
பின்னர், நமது பிரசன்டேஷன்களை மெயில் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும். அது அவர்களுக்குப் பிடித்துவிட்டால், அவற்றை Showcase செய்யும்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் நமக்கு அழைப்பு விடுக்கும். இந்த showcase performance, அந்த நிறுவனத்தின் மேலாளர் அல்லது இயக்குநர் ஆகியோருக்கு முன்பாக செய்யப்பட வேண்டியிருக்கலாம்.
No comments:
Post a Comment