எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகின்றன.
ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். முதல் தேர்வாக நாளை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது.
மேலும், தேர்வு எழுதுவோருக்கு போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படுவதுடன், விடைத்தாளின் முகப்பு பகுதியில் மா
ணவர்களின் போட்டோ இடம் பெறுகிறது. 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் தயாரிக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைகளை 30 பக்கங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்வில் காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றிக் கொள்ளுதல் போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை பொருத்தவரை 28 மற்றும் 29ம் பக்கங்களுக்கு இடையில் மாணவர்களுக்கு தேவையான வரைபடம், வங்கி செலுத்து சீட்டு, வங்கி பணம் எடுக்கும் சீட்டு, ரயில் டிக்கெட்டுக்கான படிவம், வரை படங்கள் இடம் பெறுகின்றன. தேர்வு காலை 9.15க்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும். அதில் கேள்வித்தாள் படித்துப் பார்க்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
தேர்வு மையங்களை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்களும் அடங்குவார்கள். மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். மே இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை ஏற்பாடு செய்து வருகிறது
No comments:
Post a Comment