தொலைதூரம் மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரியும், மூன்று டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவப் படிப்பில் சேர "போனஸ்" மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், அரசு மருத்துவமனை டாக்டராக, பரமகுரு என்பவர் நியமிக்கப்பட்டார். அதே மாவட்டத்தில், சங்கராபுரம் மருத்துவமனையில், டாக்டர்களாக, சுகன்யா, சரவணன் நியமிக்கப்பட்டனர். 2011 பிப்ரவரியில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மூவரும், முதுகலை மருத்துவப் படிப்புக்கு, விண்ணப்பித்தனர்.
தேர்வுக்குழு வெளியிட்ட "பணியில் இருக்கும் மருத்துவர்கள்" பட்டியலில், பரமகுரு, சுகன்யா பெற்றிருந்த மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன; சரவணன் பெற்ற மதிப்பெண் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மூவரும் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், "நாங்கள், மூன்று ஆண்டுகள், பணி முடித்துள்ளோம். தொலைதூரம் மற்றும் கடினமான பகுதிகளில், பணியாற்றுகிறோம். எங்களுக்கு "போனஸ்" மதிப்பெண் வழங்கி, தகுதி பட்டியலை வெளியிட மருத்துவ கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன், "மனுதாரர்கள் பணிபுரியும் இடங்கள், தொலைதூரம் மற்றும் கடினமான பகுதிகள் என, அரசே வகுத்துள்ளது. எனவே, கூடுதல் மதிப்பெண்கள் வழங்க மறுப்பது, நியாயமற்றது" என்றார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் மூவரும், மூன்று ஆண்டுகள் பணி முடித்துள்ளனர். "தொலைதூரம் மற்றும் கடினமான பகுதிகள்" என மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை வெளியிட்டுள்ள பட்டியலில், மனுதாரர்கள் பணிபுரியும் இடங்கள், இடம் பெற்றுள்ளன. மனுதாரர்கள் பணியாற்றும் பகுதி, மலைப் பிரதேசம் அல்ல என்பது உண்மை தான்.
திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் போது, அதே அளவுகோல், விழுப்புரம் மாவட்டத்தில், மனுதாரர்கள் பணியாற்றும் இடங்களுக்கும் பொருந்தும். எனவே, விளக்க குறிப்பேட்டின்படி, பணி முடித்த ஒவ்வொரு ஆண்டுக்கும், இரண்டு மதிப்பெண் பெற, மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது.
சுகாதாரத் துறை பிறப்பித்த உத்தரவின்படி, போனஸ் மதிப்பெண்களை, மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போது, முதுகலை படிப்பில் சேர்வதற்கு, மனுதாரர்கள் பரிசீலிக்கப்பட ஏதுவாகும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment