10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்தடையால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, படிக்கும் நேரத்தை மாற்றியமைக்க கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கும் நிலையில், இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படுகின்றனர்.
மின்வெட்டு ஏற்படும் சமயங்களில், மாணவர்களின் மனநிலை குறித்தும், பதற்றப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கோவை அரசு கலைக் கல்லுாரி உளவியல் துறை பேராசிரியர் செல்வராஜ் கூறியதாவது:
மின்வெட்டு ஏற்படும்போது, தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியர் ஒருவித பதற்றம் அடைகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு பாடங்களை படிக்கலாம் என நினைத்து அதற்கேற்ப படிக்க அமரும் போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டால், நிலைகுலைந்து விடுகின்றனர். மீண்டும் மின் வினியோகம் எப்போது வரும் என காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், தாங்கள் படித்து முடிக்க நினைத்த இலக்கை அடைய முடியாமல், அவர்களுக்கு மனமுறிவு ஏற்படலாம். மின்வெட்டு நேரத்துக்கு ஏற்ப தீவிர மனமுறிவும் அதிகரிக்கலாம்.
எதிர்காலத்தை நினைத்து அவர்களுக்கு ஏற்படும் பயத்தால் மன தவிப்புக்குள்ளாகின்றனர்.படிக்க முடியாத பயத்தில் மனது ஓய்வின்றி போய்விடும். இதனால், சரியான துாக்கமின்மை, எதிலும் நாட்டம் இல்லாமை, கவனம் இல்லாமை போன்றவை ஏற்படலாம். வசதியில்லாத ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு &'யு.பி.எஸ்.,&' வசதி இல்லாததால், மின்வெட்டு சமயத்தில் இவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவ, மாணவியர் மின்வெட்டு சமயத்தில் சமயோசிதமாக செயல்படுவது முக்கியம். தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வை பயமின்றி, பதற்றமின்றி எதிர்கொள்ள தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சிறிது மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.மின்வெட்டு சீராகிவிடும் என எதிர்பார்த்து காத்திருப்பதில் பயனில்லை. அதனால், பகலில் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
காலையில் தேர்வு எழுதிவிட்டு வந்ததும், சிறிது நேர ஓய்வுக்குப்பின், அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிக்க துவங்கிவிடவேண்டும். மின் வினியோகம் இருக்கும் வரை, மாணவ, மாணவியர் தேர்வுக்கான பாடங்களை படிக்கலாம்.மின்தடை ஏற்படும்போது பதற்றமின்றி இருக்கலாம்; தாங்கள் படிக்க நிர்ணயித்த இலக்கை அடைந்த நிறைவுடன் உறங்கிவிடலாம். இதுபோன்று படிக்கும் நேரத்தை மாற்றியமைத்துக் கொண்டு, தேர்வை நல்ல முறையில் எழுதலாம்.
இரவு 10.00 மணிக்கு மின் தடை ஏற்பட்டால், மீண்டும் மின் வினியோகம் வரும்வரை காத்திருக்காமல், உறங்கச் சென்றுவிடலாம். அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து 6.00 மணி வரை, படிக்கலாம். குறைந்தபட்சம் 5 மணி நேர துாக்கம் கிடைக்கும்போது, மறுநாள் புத்துணர்வுடன் தேர்வுக்கு செல்ல முடியும்; தேர்வையும் நன்றாக எழுத முடியும்.
உடல் என்பது ஒரு கடிகாரம்தான். குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து காலையில் கண்விழிக்கும் நேரம், உணவு உட்கொள்ளும் நேரம், படிக்கும் நேரம், உறங்கும் நேரங்களை முறையாக கடைபிடித்தால், அதுவே பழகிவிடும். கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் மின்வெட்டு பிரச்னையால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட சில மாணவர்களுக்கு கவுன்சிலிங் தரப்பட்டது. அதில், அவர்களுக்கு நம்பிக்கையை வரவழைப்பது மட்டுமின்றி, படிக்கும் நேரம், துாங்கும் நேரத்தை அட்டவணையிட்டு அதன்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு எற்படும் தேர்வு பயம், அச்சத்தை தவிர்க்க பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம்.
தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு நேரத்தில் பிற பணிகளை கொடுக்காமல் அவர்களை &'ப்ரீ&'யாக இருக்க விடவேண்டும். அவர்களை படிக்க நிர்பந்திக்காமல் அவர்களை கண்காணித்தாலே போதும். அவர்கள் படிக்க, பெற்றோர் உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, பேராசிரியர் செல்வராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment