மனிதர்களால் 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும் என்பதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 1920ல் 10 ஆயிரம் வாசனைக் கலவைகளை, மனிதர்களால் உணர முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின், யாரும் மனிதர்களின் மோப்ப சக்தி குறித்த ஆய்வில் ஈடுபடவில்லை.
அமெரிக்காவில் உள்ள, "ஹோவர்டு ஹக்ஸ்" மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளர் லெஸ்லி வாச்சல், ராக்பெல்லர் பல்கலைக்கழக, ஆய்வுக் கூடத்தின் மூத்த அறிவியலாளர் ஆண்டிரியாஸ் கெல்லர் உள்ளிட்ட நிபுணர்கள், மனிதர்களின் மோப்ப சக்தி குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
மனிதர்களின் கண்களில், மூன்று ஒளிகளை பகுத்தறியும் பகுதிகள் ஒருங்கிணைந்து, ஒரு கோடி வண்ணங்களை காண முடிகிறது. ஆனால் மனிதனின் மூக்கில், 400 மோப்ப சக்திக்கான பகுத்தறியும் பகுதிகள் உள்ளன. வெவ்வேறு வகையான 128 வேறுபட்ட வாசனைகளின் மூலக்கூறுகளை தனித்தனியாக பிரித்தெடுத்து புதிய கலவை உருவாக்கப்பட்டது.
இந்தத் தொகுப்பில், புற்கள், சிட்ரஸ் மற்றும் ரசாயனங்களின் பல்வேறு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட மூலக்கூறுகளை, 10:20:30 என்ற வீதத்தில் கலந்தபோது, மோசமான மற்றும் வித்தியாசமான வாசனைகள் கிடைத்தது. ஆய்வுக்கு அழைக்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரிடமும், மூன்று வாசனை திரவியம் வழங்கப்பட்டது. அதில், இரண்டு திரவியங்கள் ஒரே மாதிரியாகவும், மற்றொன்று வேறுபட்ட வாசனையுடனும் இருந்தது. தங்களுக்கு அளிக்கப்பட்ட மூன்று வாசனை திரவியங்களில், ஒரு திரவியத்தின் வாசனை வேறுபட்டு இருப்பதாக அவர்கள் கூறினர்.
இவ்வாறு, ஒவ்வொருவருக்கும், 264 வாசனைக் கலவைகளைத் தந்து ஆய்வு செய்ததில், அவர்கள், பெரும்பாலான வாசனைக் கலவைகளை கண்டுபிடித்து கூறினர். எனவே, "மனிதர்களால், 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும்" என இந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment