நாளை தேர்வெழுதும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 11,552 பள்ளிகளைச் சார்ந்த 10,38,876 மாணவ-மாணவியர்கள், 286 தேர்வு மையங்களில், 77,647 தனித் தேர்வர்கள் என மொத்தம் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் 26.3.2014 அன்று தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இவை தவிர, புழல், திருச்சி சிறைச்சாலைகளில் 119 சிறைவாசிகளும் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.
எதிர்காலத்தில் மாணவக் கண்மணிகள் தாம் விரும்பும் பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் பயில்வதற்கு அடித்தளமாக இப்பொதுத் தேர்வு விளங்குகிறது. மாணவர்களின் அறிவாற்றலை முழுமையாக வெளிக்கொணரும் பரிசோதனை அல்ல தேர்வுகள் என்றாலும், மாணவக் கண்மணிகளின் பயிலும் திறனையும், பாடங்கள் குறித்த புரிதலையும் வெளிப்படுத்தும் கருவியாக இப்பொதுத் தேர்வுகள் அமைந்துள்ளன.பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைத்து, நடத்தப்பட வேண்டும் என்றுமறுமலர்ச்சி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கை இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனினும், மாணவச் செல்வங்கள் எந்தெந்த மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனரே அந்தந்த மையங்களில் அச்சமோ, பதற்றமோ இன்றி, கேள்விகளை நன்கு புரிந்து சிறப்பாக தேர்வு எழுதிடவும், பெற்றோர்களின் ஆசை கனவுகளை நிறைவேற்றிடும் வகையில், நல்ல எதிர்காலம் அமையப்பெற்று, வாழ்வில் உயர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment