தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளான இன்று, மொழி பாடத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 25 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். முறைகேட்டை தடுக்க மாணவர்களிடம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் உள்ள 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் இன்று பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38 ஆயிரத்து 392 பேர் மாணவிகள். இவர்களுக்காக 2,210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13,528 பேரும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக புதுச்சேரியில் 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்கள் தவிர 1 லட்சம் தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்கு அனைத்து மையங்களிலும் தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று, மொழி பாடத் தேர்வு நடைபெற்றது. தேர்வை கண்காணிக்க 4000 பேர் கொண்ட 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அறைக் கண்காணிப்பாளர்களாக சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்கு பின்பே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஷூ, பெல்ட், டை ஆகியவற்றை கழற்றி கொடுத்த பின்பு அறைக்குள் செல்லுமாறு ஆசிரியர்கள் கூறினர். மாணவிகளை பெண் ஆசிரியர்கள் சோதனை செய்த பின்பே அனுமதித்தனர். இதனால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது, அறை மேற்பார்வையாளர், தேர்வு கண்காணிப்பாளர்கள் அடிக்கடி வந்து மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா என சோதனை நடத்தினர். இது ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பறக்கும்படையினர் வந்து சோதனை நடத்தினர். கொடுக்கப்பட்ட 3 மணி நேரத்துக்குள்ளாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் பல கட்டங்களாக தொல்லை கொடுத்ததால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிவடைந்தது. கேள்வித்தாள் படித்துப்பார்க்க 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்தடையின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment