பத்தாம் வகுப்பு தேர்வில், சென்டம் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், முக்கிய, குரூப்களில் சேர, கடும் போட்டி நிலவும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், அனைவரது மத்தியிலும், பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகபட்சமாக, இந்த ஆண்டு, 89 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றதுடன், 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை, 7.14 லட்சம் பேர் பெற்றுள்ளனர்.
இது, கடந்த ஆண்டு, 5.68 லட்சமாக இருந்தது. முக்கிய பாடங்களில், 100க்கு, 100 எடுத்த மாணவர் எண்ணிக்கையும், பல மடங்கு எகிறிவிட்டது. கணிதத்தில், 29,905 பேர், அறிவியலில், 38,154 பேர், சமூக அறிவியல் பாடத்தில், 19,680 பேர், 100க்கு, 100 எடுத்துள்ளனர். மொத்தத்தில், 8 லட்சத்து, 2,261 மாணவர்கள், அதிக மதிப்பெண்களை குவித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் அனைவரும், பிளஸ் 1ல், முதல் மற்றும் இரண்டாவது, குரூப்களை, அதிகளவில் தேர்வு செய்வர் என்பதால், இடம் கிடைப்பதில், கடும் போட்டி நிலவும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சென்னை, கண்ணம்மாபேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் லட்சுமிபதி கூறியதாவது:
பிளஸ் 1 சேர வரும் மாணவர்களின், முதல் தேர்வாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் தான் உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இந்த பாடங்கள், முதல் குரூப் என, அழைக்கப்படுகிறது. இந்த குரூப் எடுத்து படித்தால், பொறியியல் படிப்பிற்கு செல்லலாம் என்பதால், அதிக மாணவர்களின், தேர்வு இதுவே.
இரண்டாவதாக, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்கள் அடங்கியது, இரண்டாவது குரூப்பாக உள்ளது. இந்த குரூப் எடுத்து படித்தால், பொறியியல் அல்லது மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு செல்ல முடியும். இந்த குரூப்பிற்கும், மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
மூன்றாவதாக, "காமர்ஸ்" குரூப் உள்ளது. பி.காம்.,-சி.ஏ., கனவுடன், அதிகமான மாணவர்கள், இந்த குரூப்பை தேர்வு செய்கின்றனர். கடந்த எந்த ஆண்டுகளிலும் இல்லாத அளவிற்கு, 30 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களை குவித்துள்ளனர். சென்டம் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே, முதல் மூன்று குரூப்களில் சேர, கடும் போட்டி ஏற்படும். அரசு பள்ளிகளில், சராசரியாக, முக்கிய குரூப்களில், 60 மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அதிகபட்சமாக, 100 மாணவர்கள் வரை, சேர்க்கப்படுகின்றனர். பெரிய பள்ளிகளில், முதல், மூன்று குரூப்களில் சேர, மாணவர்கள் முட்டி மோதுவர். இவ்வாறு லட்சுமிபதி கூறினார்.
அரசு பள்ளிகளிலேயே, முக்கிய குரூப்களில் சேர, கடும் போட்டி இருக்கும் என்ற சூழல் இருப்பதால், தனியார் பள்ளிகளில், கேட்கவே வேண்டாம். முன்னணி தனியார் பள்ளிகளில், இடம் கிடைப்பது, இந்த ஆண்டு, குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
No comments:
Post a Comment