Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Thursday, June 27, 2013

  மாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்

  பள்ளி வேலைநேரத்தில் மாற்றம் இல்லை; பாடவேளையில் மட்டுமே மாற்றம்'' என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது. பாடவேளையை 40 நிமிடங்களாகக் குறைத்திருப்பதும் வழிபாட்டுக்குப் பிறகு தியானம், மதிய உணவுக்கு முன்பாக யோகாசனப் பயிற்சி மற்றும் நீதிபோதனை வகுப்புகள் என
  எல்லாத் திட்டங்களும் பாராட்டத் தக்கதாக இருந்தாலும், பள்ளி வேலை நேரத்தை ஏன் மாற்றியமைத்திருக்கக்கூடாது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து அன்றாடம் ஒரு பள்ளி வாகன விபத்து நேரிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அந்தக்கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

  பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியாக விழுந்த நர்சரி பள்ளி குழந்தை இறந்தபோது, அனைத்து பள்ளி வாகனங்களின் மீதான கண்காணிப்பும் நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டன. போக்குவரத்து அலுவலர்களின் ஆய்வுகள் தொடர்ந்தன. இப்போதும் தொடர்கின்றன. ஆனாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.

  இதற்குக் காரணம், எதிரே வரும் வாகன ஓட்டிகள் தவறிழைக்கிறார்கள். அல்லது பள்ளி வாகனம் அல்லாத மற்ற வாடகை வாகனங்களைப் பெற்றோர் நியமித்துக்கொள்கிறார்கள். பள்ளி வாகனங்களுக்குக் கட்டுப்பாடு, சோதனை இருக்கும் அதே வேளையில், ஆட்டோவோ கால்-டாக்ஸியோ எந்தவிதக் கட்டுப்பாடும் சோதனையும் இல்லாமல் மாணவ, மாணவியரைப் பள்ளிக்குக் கொண்டு செல்கின்றன.

  பள்ளி வாகன விபத்துகளுக்கு அடிப்படையான காரணம், பள்ளிகள் மாணவ, மாணவியரின் வசிப்பிடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருப்பதுதான். அதனால், மாணவர்கள் பள்ளி வாகனம், சொந்த அல்லது வாடகை வாகனங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

  அரசுப் பள்ளிகள் நகரங்களின் மையப்பகுதியில் சொந்தக் கட்டடத்தில் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை, புதியவை என்றால் நிச்சயமாக, புறநகர்ப்பகுதிகளில்தான் அமைந்துள்ளன. சில பள்ளிகள் குறைந்த விலைக்கு இடங்கள் கிடைப்பதால் பல மைல் தொலைவில் சுற்றிலும் புல் பூண்டுகூட முளைக்காத வனாந்திரப் பிரதேசங்களில் இயங்குகின்றன. இத்தகைய பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதாக பெற்றோர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை பல தருணங்களில் வீண்போவதில்லை என்பதும் உண்மை. ஆனால் அவர்கள் வசிப்பிடம் நகரின் மையப்பகுதி!

  தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிச்சயமாக ஒரு பள்ளி இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் வருகை, விடுதிரும்புதல், அப்பகுதிக்கு வந்துசெல்லும் பேருந்தின் நேரத்தைப் பொருத்ததாக இருக்கிறது. கிராமத்துப் பள்ளிகள் பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகுதான் இந்த நிலைமை. இதனால் கற்பித்தல் பணி பழுதுபட்டுக் கிடப்பதைக் கண்கூடாகப் பார்க்கும் கிராமத்தினர் தங்கள் குழந்தைகளை தொலைவில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். இது பெற்றோர்களின் விருப்பம் அல்ல, நிர்பந்தம்!

  இந்த நிர்பந்தம், "ஆங்கில மோகம்' என்று திசை திருப்பப்படுகிறது. தங்களுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மீதான நம்பிக்கை இழப்புதான் இந்தத் தனியார் பள்ளிகளைத் தேடிச்செல்லும் கட்டாயத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அது ஆங்கில மோகத்தால் ஏற்பட்டது அல்ல. உண்மையில், ஆங்கில வழியா, தமிழ் வழியா என்பதைக் காட்டிலும், "நன்றாகக் கற்றுத் தருகிறார்களா, இல்லையா?' என்று மட்டுமே பெற்றோர் பார்க்கிறார்கள். தனியார் பள்ளிகளில், ஆங்கில வகுப்புகளின் எண்ணிக்கைக்கு இணையாகத் தமிழ்வழி வகுப்புகளையும் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்தால், தமிழ்வழிக் கல்விக்குத்தான் போட்டாபோட்டி இருக்கும் என்பது உறுதி.

  வசிப்பிடத்தைவிட்டு மிகத் தொலைவில் பள்ளிகள் இருக்கும் இன்றைய சூழலில் பள்ளிகளின் வேலைநேரத்தை மாற்றி அமைப்பது மட்டுமே- மாணவர்கள் பள்ளிசெல்லும் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும்.

  அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் எதிர்ப்பதால் அரசு இதை செயல்படுத்தத் தயங்குகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிவேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? தொலைதூரத்தில் அமைந்திருப்பதும், வாகனங்களில் குழந்தைகளைப் பெற்றோர்கள் அனுப்ப வேண்டிய நிர்பந்தம் உள்ளதும் தனியார் பள்ளிகள்தானே?

  தனியார் பள்ளிகள் தங்கள் வேலை நேரத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாகத் தொடங்கினால், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரத்தில் மாணவர்களின் பயணம் அமையும். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இது பலன் அளிப்பதாக இருக்கும்.

  தனியார் பள்ளிகளுக்குச் சீருடைக் கட்டுப்பாடு இல்லை. கல்விக் கட்டணத்தில் கட்டுப்பாடு (இருந்தாலும்) இல்லை. பள்ளி மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகளும் இல்லை. இந்நிலையில், பள்ளி நேரத்தில் மட்டும் கட்டுப்பாடு எதற்காக?

  குறைந்தபட்சம் ஓராண்டுக்கு சோதனை அடிப்படையில் பள்ளி வேலைநேரத்தை தனியார் பள்ளிகள் மாற்றிக்கொள்ள அனுமதிக்கலாம். பாடவேளையில் மாற்றம் ஏற்படுத்துவதோடு, பள்ளிநேர மாற்றங்களால் விபத்துகள் கணிசமாகக் குறையும்.

  பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னொரு வேண்டுகோள். தனியார் பள்ளிகள் ஆங்கிலவழி வகுப்புகளுக்கு இணையாகத் தமிழ்வழி வகுப்புகள் நடத்துவதையும் கட்டாயமாக்கலாம். செய்து பாருங்கள். மாற்றம் புரியும்.

  1 comment:

  Tamil Nava said...

  விபத்தை தவிர்க்கும் வகையில் சரி என்றாலும் நீங்கள் கூறும் நிர்பந்த்தால் தனியார் பள்ளிகளை நாடுவோர் வெகு சிலரே. பல ஆயிரங்கள் கொடுத்து தனியார் பள்ளிகளை நாடுவோர் ஆங்கில வழி கல்வியைதான் விரும்புவர். காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல ஆங்கில தேவையும் கூட. மாற்றி பார்த்தால் தினமணிக்கு புரியும்