மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளுக்கு, யு.பி.எஸ்.சி., தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோர் தவிர, மாநில அரசில் (ஸ்டேட் சிவில் சர்வீஸ்) உயர்பதவி வகிப்போருக்கும், குறிப்பிடத்தக்க அளவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிஉயர்வு வழங்கப்படுகிறது.
வருவாய்த்துறையில் டி.ஆர்.ஓ., மற்றும் பிறதுறைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், ஐ.ஏ.எஸ்., பணியிடத்திற்கு, மாநில அளவில் தேர்வு செய்யப்படுவர். இதேபோல, மாநில அரசின் "குரூப் 1" தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி., யாக பணியாற்றுவோருக்கு, ஐ.பி.எஸ்., அந்தஸ்து வழங்கப்படுகிறது.
அவர்களின் பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு, 54 வயது வரையே, இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல், இந்த பதவி உயர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி, மாநில அரசு அதிகாரிகளும் இனி, பணிஅனுபவத்துடன், தேர்வு எழுத வேண்டும். இதில் வென்றால் தான், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அந்தஸ்து கிடைக்கும். இதற்கான போட்டியில் பங்கேற்க, குறைந்தபட்சம், 8 ஆண்டு பணியில் இருந்திருக்க வேண்டும்; 54 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்தேர்வு 1000 மதிப்பெண் கொண்டது. இதில், எழுத்துத் தேர்வுக்கு 400 மதிப்பெண்; பணி அனுபவத்திற்கு 200 மதிப்பெண்; சர்வீஸ் ரெக்கார்டு மதிப்பீடுக்கு 250 மதிப்பெண்; நேர்காணலுக்கு 150 மதிப்பெண்.
இவர்களை தேர்வு செய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வில் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இதில் அந்தந்த மாநில தலைமை செயலர், அம்மாநிலத்தின் மிக மூத்த அரசுச் செயலர் ஒருவர், மத்திய அரசின் கூடுதல் செயலர் ஒருவர், மத்திய தேர்வாணையத்தின் நிபுணர் ஒருவர் இடம் பெறுவர்.
ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் நேர்முகத் தேர்வுக்கு, மாநில தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., மத்திய அரசின் கூடுதல் செயலர், மத்திய தேர்வாணையத்தின் நிபுணர் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு, ஒரு பணியிடத்திற்கு 5 பேரை அழைக்கும். அதில், சரிபாதி பேரை தேர்வு செய்தபின், இறுதி நேர்காணல் மூலம், ஒருவரை தேர்வு செய்வர்.
No comments:
Post a Comment