அனைத்து கல்வி மையங்கள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் தொடர்புள்ள நிறுவனங்களை, ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கடிதம் எழுதியுள்ளார்.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அவற்றுக்கு பதிலாக, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைக்கு மாறும்படி, மக்களிடம், மத்திய அரசு தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இதன்படி, பல அரசு நிறுவனங்கள், ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை பின்பற்றத் துவங்கி விட்டன.
இந்த நிலையில், அனைத்து கல்வி நிலையங்கள், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும், ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு முழுமையாக மாறும்படி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தி உள்ளது. கடந்த, 12 முதல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, ’விசாகா’ என்ற பெயரில், ரொக்கமற்ற பரிவர்த்தனை பிரசாரத்தை தீவிரமாக செய்தது.
அதில், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைகள், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். அன்றாட செலவுகளுக்கு, ரொக்கமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்பட்டன.
இது தொடர்பாக, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் அனுப்பியுள்ள கடிதத்தில், ’ரொக்கமற்ற பரிவர்த்தனையை வலியுறுத்தும், ’விசாகா’ பிரசாரத்தை, பிப்., 12 வரை, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தொடர வேண்டும்’ என, வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும், ’டிஜிட்டல்’ பரிவர்த்தனைக்கு மாறும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியது.
No comments:
Post a Comment