பொங்கல் காலங்களில் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வேளையில் மத்திய அரசு நிறுவனமான தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இறங்கியுள்ளது.
அதனால் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாகவும், தமிழர்களின் அடையாளமாகவும் இருக்கிற பொங்கல் திருநாளுக்கு விடுமுறை இல்லை. அஞ்சல்துறை ஊழியர்களுக்கான இந்த ஆண்டு விடுமுறை நாள் பட்டியலில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் இல்லை. இந்த துறைக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 17 நாட்கள் விடுமுறை பட்டியலில் பொங்கல் இல்லை. தமிழர்கள் கொண்டாடாத பல பண்டிகைகளுக்கு மத்திய அரசு தேசிய விடுமுறை அளித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்த ஆண்டுக்கு பிப்.24ம் தேதி வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி, ஆக.25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, செப்.28ம் தேதி வியாழக்கிழமை ஆயுத பூஜைக்காக கூடுதலாக ஒரு நாள் என மொத்தம் 3 நாட்கள் உள்ளூர் அனுமதிக்கப்பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மகா சிவராத்திரிக்கு விடுமுறை விடவில்லை. பொங்கல் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கலை ஓரம் கட்டிவிட்டு மகாசிவராத்திரிக்கு விடுமுறை விட்டுள்ளனர். இந்த பட்டியலை 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதமே அதற்கான குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு பொங்கல் ஜன.14ம் தேதி சனிக்கிழமை வருவதால் அதிகாரிகளுக்கு விடுமுறை. ஆனால் தலைமை அஞ்சலகங்கள், அஞ்சலகங்களுக்கு விடுமுறை கிடையாது. அதனால் பொங்கல் அன்று வேலைக்கு வர வேண்டும். தங்களுக்கு பிரச்னை இல்லை என்பதால் அதிகாரிகள் பொங்கலை கண்டுக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் மகாசிவராத்திரி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.
ஆனால் மத்திய அரசு நிறுவனம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல் ஆயுதபூஜை செப்.29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை விடுமுறை அறிவித்திருந்தால், மத்திய அரசு தமிழகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு செப்.28ம் தேதி வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இப்படி உள்ளூர் மக்களின் விழா, பண்பாடுகளை அறியாத மத்திய அரசு அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான அஞ்சல் துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ‘ பொங்கல் எங்களின் முக்கிய திருவிழா என்று அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னோம். ஆனால் அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. அதனால் போராட்டம் நடத்த உள்ளோம். அப்படியும் நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை என்றால் பொங்கல் அன்று ஒட்டுமொத்த ஊழியர்களும் விடுப்பில் செல்ல திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை என்று தமிழரின் அடையாளங்களுக்கு எதிரான போக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
No comments:
Post a Comment