தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு இந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் வரை திருவண்ணாமலையில் நடக்கிறது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில் இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வரும் 8-ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ்,
வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாடு குறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதிய பென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது சங்கத்தின் 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து அ.தி.மு.க அரசு இருந்து வருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படும் போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள் தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சங்க நிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஜெயலலிதாவிடம் சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கிறார். இப்போது அவர் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. புதிய பென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக நிதித்துறையை சநிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
No comments:
Post a Comment