டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 11 பேரின் நியமனம் செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
புதிய உறுப்பினர்கள் தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்களாக வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுசாமி, மாடசாமி, முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி பி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் தலைமை என்ஜினீயர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு அதிகாரி புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தமிழக அரசு பரிந்துரையின் அடிப்படையில் அப்போதைய கவர்னர் கே.ரோசய்யா, அவர்களை நியமனம் செய்தார். இதை எதிர்த்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவு
‘தமிழக அரசு அவசர கதியில் தகுதியில்லாத நபர்களை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமித்துள்ளதால் அவர்களது நியமனத்தை ரத்து செய்யவேண்டும்’ என அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு 11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை என்றும், அவர்களது நியமனம் செல்லாது என்றும் அந்த நியமனங்களை ரத்து செய்வதாகவும் கூறி தீர்ப்பு வழங்கியது.
மேலும், 11 உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது-
புதிய உறுப்பினர்களின் நியமனங்கள் அனைத்தும் அரசியல் சட்டத்தின் உரிய பிரிவின் அடிப்படையில் ஆளுனரால் செய்யப்பட்டவையாகும். தமிழக அரசின் நியமனத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க மனுதாரர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பொது நிர்வாகத்தில் தேவையான அனுபவம் உள்ளது.
அரசியல் கட்சியை சாராதவர்கள்...
இந்த நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட நடைமுறைகள் எவையும் வரையறுக்கப் படவில்லை. இந்த நியமனங்களுக்கான நடைமுறைகளுக்கு தேவையான கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தகுதிக்குறைவின் அடிப்படையில் இவர்களுடைய நியமனத்தை ஐகோர்ட்டு ரத்து செய்யவில்லை. ஆனால் இந்த நியமனம் தொடர்பான நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட தேதியில் அவர்கள் எந்த அரசியல் கட்சியிலும், எந்த பதவியையும் வகிக்காதவர்கள்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி...
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இது போன்று ஒரு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் இது போன்ற நியமனங்களை நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும், உறுப்பினர்கள் தவறு செய்யும் பட்சத்தில் ஜனாதிபதியால் மட்டுமே அவர்களுடைய நியமனங்களை ரத்து செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 316-ன் கீழ், மாநிலத்தின் கீழ் வரும் பொதுப்பணியாளர்கள் ஆணையத்தில் நியமனங்கள் செய்ய மாநில அரசுக்கு உள்ள உரிமையில் அந்த உறுப்பினர்கள் மீது ஏதாவது புகார் இருந்தால் ஒழிய கோர்ட்டு தலையிட முடியாது. எனவே, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment