பண மதிப்பிழப்பு அறிவிப்பு அமலில் இருந்த 50 நாட்களில் கூடுதல் நேரம் வேலை பார்த்ததற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று, வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிச் சென்றனர். மேலும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கும், டொபசிட் செய்வதற்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பு அமலில் இருந்த 50 நாட்களும் வங்கி ஊழியர்கள் காலம் நேரம் பார்க்காமல் கூடுதல் நேரம் வேலை பார்த்தனர். பீகார் மாநிலத்தில், ககாரியா மாவட்டத்தில் உள்ள அலகாபாத் வங்கியில் ஊழியராகப் பணியாற்றும் காஞ்சன் என்ற பெண், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய ஏழு மாதக் குழந்தையுடன் வந்து வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வங்கியில் போதிய பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தபோது, பல இடங்களில் வங்கிகள் மற்றும் ஊழியர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் அதிக பணிச் சுமை காரணமாக சில வங்கி ஊழியர்கள் உயிரிழந்தனர். ஆயினும், இந்த நாட்களில் நேர்மையாகப் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு மக்கள் மட்டும்தான் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கி ஊழியர்களும் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 50 நாட்களில் கூடுதல் வேலை பார்த்ததற்கு பாராட்டு வேண்டாம், அதற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் துணை அமைப்பான தேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 50 நாட்களில் வங்கி ஊழியர்கள் 12 முதல் 18 மணி நேரம் வரை பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் ஒருசில வங்கிகள்தான் கூடுதலாக வேலை பார்த்த நேரத்தை ஓவர் டைமாக எடுத்துக் கொண்டன. அனைத்து வங்கிகளுமே கூடுதல் நேரம் வேலை பார்த்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பாகவும் கடுமையாகவும் பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்த மறுநாளிலே இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment