தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி, மாணவர் சேர்க்கை நடப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவே, பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். ஆங்கில பேச்சு, மொழியறிவு, பொது அறிவு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தல் போன்றவற்றுக்காக, தனியார் பள்ளிகளை தேடி, பெற்றோர் படையெடுக்கின்றனர்.
இதை பயன்படுத்தி, பல தனியார் பள்ளிகள், விதிகளை மீறி, அதிக நன்கொடை வசூலிக்கின்றன. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமான விதிகளை பின்பற்றுகின்றன. கல்விக் கட்டணம், நன்கொடை வசூல், விண்ணப்ப கட்டணம், வினியோகம் என, அனைத்திலும், ஒவ்வொரு பள்ளியும், தனி வழியில் செயல்படுகின்றன. இதற்கு, அரசு தரப்பில், எந்த கண்காணிப்பும் இல்லாததால், எல்.கே.ஜி., அட்மிஷனுக்கே, பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு உள்ளது.
இதை பயன்படுத்தி, பல இடைத்தரகர்களும், கல்வித் துறை ஊழியர்களில் சிலரும், தனியார் பள்ளி அட்மிஷனில், வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், பள்ளிக் கல்வி இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்கள் என, யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலைமையை மாற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment