தமிழக அரசு பணியில் சேர்ந்தோர், உயர் கல்வி படிப்பது, வெளிநாடுகள் செல்வது, சொத்து வாங்குவது என, ஒவ்வொன்றுக்கும், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதன்படி, பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியராக சேருவோர், முதுநிலை பட்டம், ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றை படிக்க, அரசு அனுமதி பெற வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்து விட்டு, தற்போது ஊக்க ஊதியம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. 2009 வரை, அனுமதியின்றி உயர் கல்வி முடித்தோருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பின்னேற்பு அனுமதி அளித்தனர்.
அதிகாரத்தை பயன்படுத்தி பல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததால், 2009க்கு பின், இந்த பின்னேற்பு அனுமதி தரும் அதிகாரம், பள்ளிக்கல்வி செயலருக்கு வழங்கப்பட்டது. ஆனால், செயலர் இதுவரை, பின்னேற்பு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனுக்கு, பள்ளிக்கல்வி செயலர் சபிதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், ’அனுமதி இன்றி உயர் கல்வி படித்தவர்கள் எத்தனை பேர்; அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.
அதனால், அனுமதியின்றி உயர் கல்வி முடித்து, ஊக்க ஊதியத்திற்காக விண்ணப்பித்துள்ள, 3,000 ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள், விளக்கம் கேட்டு, ’நோட்டீஸ்’ அனுப்பி உள்ளனர். விளக்கம் வந்த ஒரு வாரத்தில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment