தமிழகத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் ‘மழை பெய்தது’ என்று சொல்வதைவிட ‘மழை கொட்டியது’ என்று சொல்வதே பொருத்தம். சாலைகள் எங்கும் ஆறாக ஓடிய நீர், பல இடங்களில் இன்னும் இடுப்பு அளவு தேங்கிக்கிடக்கிறது. இப்படித் தேங்கிக்கிடக்கும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்துள்ளது என்பதுதான் வேதனை. மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்.
ஏழு நாட்களுக்கு நிலவேம்புக் கஷாயம்
ஏழு நாட்களுக்கு காலை, மாலை என நிலவேம்புக் கஷாயத்தைக் குடியுங்கள். கஷாயம் குடித்த அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். 200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் கொதித்து 50 மி.லி-ஆக வற்றியதும் வடிகட்டி, மிதமான சூட்டில் பருகலாம். எந்தவிதக் காய்ச்சலும் குணமாகும். காய்ச்சல் வராதவரும் ஏழு நாட்கள் தொடர்ந்து அருந்த, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல், சளி, வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
தினம் தினம் உணவில் மாற்றம்
சுக்கு, மிளகு, பூண்டு, வெந்தயம், மஞ்சள், சீரகம், கருஞ்சீரகம், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தனியா, இஞ்சி, திப்பிலி போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
மழையில் நனைந்த பின்...
மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. கால்கள் மற்றும் நகங்களில் நன்றாக சோப் போட்டுக் கழுவ வேண்டும்.
நீரில் நனைந்த செருப்பையும் சுத்தம் செய்த பிறகே மறுநாள் அணிய வேண்டும். முடிந்த வரை ஷூ, தோல் செருப்பு அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
நனைந்த உடைகளை, மற்ற உடைகளுடன் சேர்க்காமல், தனியே துவைப்பது நல்லது. வெளியில் செல்லும்போது, கட்டாயம் ரெயின் கோட், குடை, டிஷ்யூ பேப்பர் வைத்திருப்பது அவசியம்.
ஈரக் கால்களுக்கு இதமான மசாஜ்
என்னதான் ரெயின்கோட் போட்டிருந்தாலும், கால்கள் நனையத்தான் செய்யும். சாலையில் தேங்கிய நீரில் கால்களைப் பதிப்பதைத் தவிர்க்க முடியாது. பக்கெட்டில் பாதி அளவு வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எப்சம் உப்பு போட்டு, அதில் 20 நிமிடங்கள் கால், பாதங்களை வைத்திருக்கலாம். இதனால் தொற்றுக்கள், அழுக்கு, கால் வலி, எரிச்சல் ஆகியவை நீங்கிவிடும்.
மழைக்கால நோய்கள்
மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்புகள் அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப்போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களும் வரலாம்.
சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் தயாரிக்கும் உணவை உண்ணலாம்.
கொசுத் தொல்லை நீங்க...
டெங்கு, மலேரியா போன்றவை கொசுக்களால் பரவக்கூடியவை. வீட்டில், துளசி, நிலவேம்பு, லெமன் கிராஸ், நொச்சி, கற்பூரவல்லி, புதினா ஆகிய செடிகளை வளர்ப்பதால், கொசு வீட்டில் வருவது ஓரளவுக்குத் தடுக்கப்படும்.
மண் சட்டியில் நொச்சி, நிலவேம்பு, துளசி ஆகியவற்றை எரித்து, புகையை வீட்டில் பரவவிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.
தேங்காய் எண்ணெய், புங்க எண்ணெய் ஆகிய வற்றை சமஅளவு எடுத்து, அதில் மண்ணெண் ணெயை எட்டில் ஒரு பங்கு கலந்து, நீர் தேங்கும் இடங்களிலும், வீட்டைச் சுற்றிலும் தெளிக்கலாம். இது கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும்.
கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களைப் பயன்படுத்துவதும் சிறந்த வழிதான். தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழலை சுத்தமாக்குவோம்
கொசு உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். பிளாஸ்டிக் கப், தேங்காய்ச் சிரட்டை, பிளாஸ்டிக் கவர், டயர், ஆட்டுக்கல், பறவைகளின் உணவுப் பாத்திரம் போன்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தண்ணீர் தேங்காத வகையில், தலைகீழாக வைக்க வேண்டும்.
செடிகள் நிறைந்த வீட்டில், கூடுதல் கவனம் எடுத்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குப்பையைச் சேர்த்துவைக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது.
கிணறு, தொட்டி ஆகியவற்றை மூடிவைத்திருப்பது அவசியம்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லி ஆகியவற்றின் சாற்றைக் குடிக்கலாம். மழைக்காலத்தில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பு சேர்க்க சளி பிடிக்காது.காலையில் திரிகடுகம் என்ற சூரணத்தைப் பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து, நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இரவில் திரிபலா சூரணத்தை ஒரு டீஸ்பூன் கலந்து, வெல்லம் சேர்த்து, திரிபலா டீயாகப் பருகலாம். டெங்கு காய்ச்சலில் ரத்தக்கசிவு வராமல் இருக்க, உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூர லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.
- ப்ரீத்தி
படம்: ஜெ.வேங்கடராஜ்
காபி, டீக்குப் பதிலாக...
ஆவாரம் பூ
ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் அலசிய பிறகு, தண்ணீரில் கொதிக்க வைத்து எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூக்களின் இதழ்களைப் பிரித்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு, எலுமிச்சைச் சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
துளசி
துளசி இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, ஏலக்காய் தட்டிப் போட்டு, கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.
கொத்தமல்லி
கொத்தமல்லித்தழைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, சிறிது சுக்கு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
புதினா
புதினா இலைகளை நீரில் கொதிக்கவிட்டு, எலுமிச்சைப் பழச்சாறு, கருப்பட்டி கலந்து குடிக்கலாம்.
மூலிகை காபி
சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா ஆகிய வற்றை அரைத்து, காபி பொடியாகப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment