வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த வெளி மாவட்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் சென்னை சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க முடியாது என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் படித்துவிட்டு சென்னையில் பணிபுரிபவர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பட்டப் படிப்பு சான்றிதழ்களுக்கு மறு சான்றிதழ் பெற அவர்கள் படித்த கல்லூரி அல்லது பல்கலைக்கழத்துக்க சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்த கன மழை, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கல்விச் சான்றிதழ்கள், பிற ஆவணங்களை இழந்தவர்கள் மறு சான்றிதழ், ஆவணங்களைப் பெறும் வகையில் கடந்த 14-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.
வெள்ளம் பாதித்த சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 132 சிறப்பு முகாம்களும் வருகிற 27-ஆம் தேதி வரை செயல்பட உள்ளன.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் முகாமில், வெள்ளத்தில் அனைத்துச் சான்றிதழ்களையும் இழந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் தனது பள்ளி, கல்லூரி சான்றிதழ்களைப் பெற திங்கள்கிழமை விண்ணப்பித்தார்.
அவரிடம் பள்ளிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட முகாம் அதிகாரிகள், கல்லூரி சான்றிதழ்களுக்கான விண்ணப்பத்தைப் பெற முதலில் மறுத்தனர்.
அவர் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திராகாந்தி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
பின்னர், அதிகாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த விண்ணப்பத்தையும் பெற்றுக்கொண்ட முகாம் அதிகாரிகள், இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநரிடம் ஆலோசித்துவிட்டு விண்ணப்பம் ஏற்கப்படுமா என்பதை செல்பேசி மூலம் தகவல் தெரிவிப்போம் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தனது பட்ட சான்றிதழுக்கான விண்ணப்பம் ஏற்கப்படுமா என்பதை அறிந்துகொள்வதற்காக புதன்கிழமை மீண்டும் சிறப்பு முகாமுக்கு சாந்தி சென்று விசாரித்துள்ளார். அப்போது, பட்டப் படிப்பு சான்றிதழுக்கான விண்ணப்பம் இங்கு ஏற்கப்படமாட்டாது. எனவே, தாங்கள் படித்த திருச்சி கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவரைப்போல், அங்கு வந்த மேலும் பலரை முகாம் அதிகாரிகள் திருப்பியனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சாந்தி கூறுகையில், கல்லூரி சான்றிதழுக்கான விண்ணப்பம் ஏற்கப்படுமா என்பதை அறிந்து கொள்வதற்காக முகாமுக்கு வந்தோம். என்னுடன், வெள்ளத்தில் சான்றிதழை இழந்த வெளி மாவட்ட பல்கலைக்கழகங்களில் படித்த மேலும் பலர் வந்தனர்.
ஆனால், முகாம் அதிகாரிகள் விண்ணப்பங்களை ஏற்க மறுத்துவிட்டனர். இது பள்ளிச் சான்றிதழுக்கான முகாம். பட்டப் படிப்பு சான்றிதழைப் பெற, படித்த கல்லூரிக்கு அல்லது பல்கலைக்கழகத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினர்.
விண்ணப்பிக்க வந்தவர்களில் பலர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் பல ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள். இப்போது, மறு சான்றிதழுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஒரு முறை, சான்றிதழைப் பெற ஒரு முறை என திருச்சிக்கும், கோவைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சியில் படித்த கல்லூரியில் தொடர்புகொண்ட போது, சான்றிதழ் தொலைந்ததற்கான போலீஸ் புகார் பதிவு கட்டாயம் என்கின்றனர். இதனால், செய்வதறியாது நிற்கிறோம் என்றார்.
இதுகுறித்து முகாம் அதிகாரிகள் கூறியது:
பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிச் சான்றிதழ் நகலைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment