பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தைகள் தின விழா தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா முன்னிலை வகித்தார்.
குழந்தைகள் தினப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: பள்ளிகளுக்கு பிள்ளைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதனால் இடைநிற்றல் குறைந்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை தந்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசு இலவசமாக கல்வி தருகிறது.
குழந்தைகள் எப்படி படிக்கின்றனர் என ஆசிரியர்களை அணுகி பெற்றோர் கேட்க வேண்டும். அண்மையில் துவக்க கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இன்றைய மாணவர்கள் அறிவுத்திறனில் படுசுட்டியாக உள்ளனர். ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படித்தால், சிறந்த மனிதர்களாக உருவாகலாம்.கல்வியோடு நுால்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலை புதுச்சேரியில் இல்லை. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000-க்கு 42 என்ற விகிதத்தில் உள்ளது. புதுச்சேரியில் 1000-க்கு 17 மட்டுமே உள்ளது.
அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக சத்தான உணவுகள் தரப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் கிளை மருத்துவக்கல்லுாரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக 78 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவ, மாணவியருக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் அண்மையில் முடிந்த மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு அதிகம் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் 2014--15-ம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர் களுக்கு முறையே 50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என 77 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தைகள் விருதும் 16 பேருக்கு தரப்பட்டது. குழந்தைகள் தின போட்டியில் வென்ற 153 பேருக்கும் பரிசளிக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இணை இயக்குநர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment