சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியாற்றியதற்கான மதிப்பூதியம் வழங்காமல் இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். எனவே உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
சிவகங்கை மாவட்டத்தில் பால்வளம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013 மார்ச் 22 முதல் ஏப்ரல் 24 வரை நடந்தது. இதில் மாவட்டம் முழுமைக்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஒரு வாரத்திற்கும் மேலாக பணியாற்றினார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணியாற்றிய இவர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வேட்பு மனு வழங்கல், வேட்பு மனு பரிசீலனை, தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை, பதவி ஏற்பு உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டன.
இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 250 வீதம் மதிப்பூதியம் மற்றும் பயணப்படி வழங்குப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து 30 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கு அதிகாரிகளின் மெத்தனபோக்கே காரணம். இது குறித்து விளக்கம் கேட்கும் ஆசிரியர்களை பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அலைகழிக்கின்றனர்.
தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு மதிப்பூதியம் கொடுக்க பால்வளத் துறையிடம் பணம் இல்லையென்றால் தேர்தல் நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் பெற்று வழங்க வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையமோ முiறாயக நிதி ஒதுக்கித்தான் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறது. பால்வளத்துறை ஆணையரோ தேர்தல் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். இடையில் நடக்கும் குழப்பத்திற்கு யார் காரணம் என்பதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெளிவுபடுத்த வேண்டும். இனிமேலும் கால தாமதம் படுத்தாமல் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உடனடியாக மதிப்பூதியம் வழங்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எங்கள் மாவட்ட அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment