தமிழக இன்ஜினியரிங் மாணவர்களின் கனவு பல்கலையான, அண்ணா பல்கலையின் இணையதளம், ஈரான் நாட்டினரால், 'ஹேக்கிங்' செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜி., படிக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பதையே அதிகம் விரும்புவர். குறிப்பாக, அண்ணா பல்கலையில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, ஆர்கிடெக் கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் சேரவே விரும்புவர்.
அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளில், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் பாடம் தொடர்பாக, தொழில்நுட்ப விழாக்களை நடத்துவது வழக்கம். கிண்டி இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் சார்பில், 'குருஷேத்ரா' - அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், 'த்ரிஷ்யா' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, அண்ணா பல்கலை இணையதளத்திலேயே இணைப்பு தளங்கள் உள்ளன. இந்நிலையில், த்ரிஷ்யா நிகழ்ச்சிக்கான இணையதளத்தை, ஈரான் நாட்டினர், ஹேக்கிங் செய்துள்ளதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்து, இணையதள செயல்பாடுகளை முடக்கி உள்ளனர்.
ஹேக்கிங் செய்தவர்கள், ஈரான் நாட்டின் பிரபல இசையமைப்பாளர்களின் இசை ஆல்ப விளம்பரங்களை இணைத்துள்ளனர். இதனால், அண்ணா பல்கலை மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எத்தனை நாட்களாக இணையதளம், ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தது; எந்த நாட்டிலுள்ள கணினி சர்வர் மூலம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ'வின் வணிக நிறுவனமான, 'ஆன்ட்ரிக்ஸ்' இணையதளம், ஹேக்கிங் செய்யப்பட்டு, சீன நாட்டின் பிரா விற்பனை நிறுவன இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment