சூப்பர் ஸ்பெஷாலிட்டி கோர்ஸ் எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், இட ஒதுக்கீடு தேவையில்லை என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதி செய்துஉள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில், சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அளிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் இருப்பிடத்தை அடிப்படையாக வைத்து, இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள், நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, பி,சி.பண்ட் ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். நாட்டின் நலன் கருதி, சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு நடைமுறையை மாற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுன்சில், தகுந்த வழிகாட்டும் குறிப்புகளை உருவாக்க வேண்டும். தலையிட விரும்பவில்லை ஆனாலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 371 டியின் கீழ் வழங்கப்படுவதால், அதில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள பிரச்னை குறித்து, அடுத்த மாதம், 4ல், விசாரித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment