பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட 39 பள்ளிகள்; வால்பாறையில், ஏழு பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண், 100 சதவீத வெற்றி பெற ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி வாரியாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க திட்டமிடப்பட்டது. காலாண்டுத்தேர்வில், 400 மதிப்பெண்ணுக்கு மேலாக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் குறித்த தகவல்கள் கல்வி மாவட்ட அளவில் அனுப்பப்பட்டது.
கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள், 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு பாடத்திலும் தனித்திறன் படைத்த ஆசிரியர்களை கொண்டு, மேலும், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது.
'கல்வி மாவட்டத்தில், 100 பேர், காலாண்டு தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். அவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 9:30 முதல் 12:30 மணி வரையும்; மதியம் 2:00 முதல் 4:00 மணி வரையும் இரண்டு பேட்ச் ஆக பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி மேலும் பயிற்சி அளித்தால், அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதால் சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது.' என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்பாறை இல்லை
வால்பாறையில் ஏழு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பகுதி மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதால், மலைப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. மலைப்பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்கள் வாழ்வாதாரத்திற்கு, கல்வி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இப்பகுதியிலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
'கல்வித்தரம் முன்னேற வேண்டும்'
கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது: படித்து, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மேலும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், பாடத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களும் தேர்வில் வெற்றி பெற வைக்க போதுமான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால், அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறுவதுடன், அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைக்கவும் வாய்ப்பாக இருக்கும். பின்தங்கிய மாணவர்கள், எந்த பாடத்தில் பின் தங்கியுள்ளனர்; அவர்கள் கல்வித்தரம் முன்னேற என்ன செய்யலாம் என திட்டமிட வேண்டும். அவர்களுக்கு, எளிதாக பாடத்தினை கொண்டு செல்வது என்பது குறித்து திட்டமிட்டு, பயிற்சி அளிக்கலாம். நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது போன்று, பாடத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அரசு திட்டம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கல்வி ஆர்வலர்கள் கூறினர்.
1 comment:
வாயி கிழிய பேசுங்கப்பா ஒங்க காட்டுல மழை இது நீடிக்காது
Post a Comment