தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இவ்வாறு கூடுதலாக கவனிப்பதால் பிளஸ் 2 பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டன. இதனால் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனால் ஏற்படும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாவது பொது கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.ஏற்கெனவே, கலந்தாய்வு மூன்று மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்ட நிலையில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியையும் கவனிக்க முடியாமலும், பாடத்தை முழு ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாமலும் திணறுகின்றனர்.
No comments:
Post a Comment