வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும்,
அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.
- அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது
– 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது
– 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது
– கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு
– ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு
– சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு
– நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு,
எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. அந்த வரிசையில் வல்லமை இதழின் வல்லமையாளர் விருதும் சேர்கிறது.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்
திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள், ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை.
- கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது
– கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது
என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்.
அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
Chokkalingam Lakshmanan5
கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப., தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள்.
மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது.
இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள்.
Chokkalingam Lakshmanan1-2
மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன.
Chokkalingam Lakshmanan3aChokkalingam Lakshmanan3b
தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார்.
மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
_______________________________________________________
ஊடகங்களில் வெளியான சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி பற்றிய செய்திகள் ஒருசில:
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 1ம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி
வாசம் வீசும் வகுப்பறை! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109185
கோணங்கள் கற்றல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109196
ஓட்டிக்கொண்டே படிக்கலாம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109792
புதிய உருவம் அறிவோம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108797
ஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108783
கல்வி… வகுப்பறைக்குள் மட்டுமல்ல! – தினமணி: 27 June 2015
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி – தினமணி: 31 May 2015
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை – தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலர்: 13 June 2015
No comments:
Post a Comment