ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறையில், அடுத்த ஆண்டில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசு துறையில், உயர்ந்த அந்தஸ்துள்ள, ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட, 24 வகையான பதவிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இன்ஜி., பட்டதாரிகள் முதல்நிலை தேர்வில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிசாட் என்ற, சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்டான, பொதுவான சிந்தனை திறன் தேர்வு தாள் கட்டாயம். மற்றொரு தாளான பொதுப் படிப்பில், கணிதம் மற்றும் இன்ஜி., பட்டதாரிகள், அதிக அளவில் வெற்றிபெறும் வகையில், கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் இன்ஜினியரிங் படிக்காதவர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில், புதிய மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் முன்னாள் செயலர் பி.எஸ்.பஸ்வான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, வரும் பிப்ரவரிக்குள்அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் கல்வியாளர்கள் கூறியதாவது:
சிவில் சர்வீசஸ் தேர்வில், தற்போதைய முறைப்படி, கணிதம் மற்றும் இன்ஜி., பட்டதாரிகள் மட்டும் அதிக அளவில் வெற்றி பெறும் நிலை உள்ளது. அதனால், அனைத்து வகை பட்டதாரிகளும் தேர்ச்சி பெறும் வகையில் வினாத்தாளை மாற்ற வேண்டும். கலை, அறிவியல் கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களும், இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கேற்ற வகையில், வயது வரம்பு தளர்வு, பாடத்திட்டம் மாற்றம், தேர்வர்களுக்கான தகுதியை நிர்ணயித்தல் போன்றவற்றில் புதிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
வட மாநிலத்தவர் மட்டுமே, அதிக அளவில் தேர்ச்சி பெறும்படி உள்ள தற்போதுள்ள முறையை, அனைத்து மாநிலத்தவரும் தேர்ச்சி பெறும் வகையில் மத்திய அரசு மாற்றும் என, தெரிகிறது. புதிய விதிகளின்படியே, அடுத்த ஆண்டு ஆகஸ்டில், முதல்நிலைத் தேர்வு, பின், முதன்மைத் தேர்வும் நடக்கும். எனவே, மாற்றத்துக்கு ஏற்றவாறு, தற்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment