ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கருணாநிதி: அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான செய்திகள் வந்தபோதும் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து முதல்வரோ, அந்தத் துறை அமைச்சரோ பேசவில்லை. வேறு வழியில்லாமல் அதிகாரிகள் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளனர்.
அந்தப் பேச்சுவார்த்தையிலும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இனியாவது, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு, போராட்டத்தை முடித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோவன்: தமிழகத்தில் உள்ள மொத்தம் 37 ஆயிரம் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்குக் கல்வி போதிக்க வேண்டி 3 லட்சம் ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பள்ளிகளைப் புறக்கணித்துப் போராடுவதை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் வராத நிலையில் பள்ளிகளை சத்துணவு அமைப்பாளர்களை வைத்து நடத்துவது எனும் முடிவு மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ராமதாஸ்: 15 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தோர் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கதாகும். மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் முதல்வரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசித் தீர்வு கண்டிருக்க வேண்டும். இனியாவது, அதைச் செய்ய வேண்டும்.
இரா.முத்தரசன்: தற்போது 10-ம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான அரசின் பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்துக்குத் தள்ளிவிடுவது, மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகும், எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்காத காரணத்தால்தான் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment