மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், நேரடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு புகார்களால் மே மாதம் தேர்வு முடிவு அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், நேரடி மாணவர் சேர்க்கை முறையில், 2014ம் ஆண்டு டிச., தேர்வில் ஏற்கனவே சர்ச்சை எழுந்தது. இதனால், 50 சதவீதம் மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை.இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவு மாணவர்களுக்கு, இந்தாண்டு மே மாதம் தேர்வுகள் நடந்தன. இதில், 1918 மாணவர்கள் நேரடி சேர்க்கையில் தேர்வு எழுதினர். ஐந்து மாதங்களாகியும் இவர்களுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:மே தேர்வு எழுதிய வழக்கமான மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டன. ஆனால், நேரடி சேர்க்கை முறையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் பல்கலை அலுவலர்கள் மழுப்பலாக பதில் கூறி, அலையவிடுகின்றனர். ஏன் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என்ற விபரம் தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.
பதிவாளரின் திடீர் உத்தரவு:இதற்கிடையே பல்கலை பதிவாளர் ராஜசேகர், தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2014ம் ஆண்டு முதல் நேரடி மாணவர் சேர்க்கை தேர்வு முடிவுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். 2015ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை நேரடி சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment