'சிவில் சர்வீசஸ்' தேர்வில், பொதுப் பாடத்தில் தமிழக மாணவர்கள் பின்தங்கியதால், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகையான பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 23ல், முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
'கட் ஆப்' மதிப்பெண்:
கடந்த ஆண்டு நடந்த தேர்வில், தமிழகத்தில், 600 பேர் தேர்ச்சி பெற்றனர்; இந்த ஆண்டு, 500க்கும் குறைவாகவே தேர்ச்சி அடைந்துள்ளனர். பொதுப் பாடங்களில் பின்தங்கியதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, 'இல்மி ஐ.ஏ.எஸ்., அகாடமி' நிறுவனர் சம்சுதீன் காசிமி கூறியதாவது:கடந்த, 2014ல், 95 என்றிருந்த, 'கட் ஆப்' மதிப் பெண், 2015ல் அதிகம் ஆகி விட்டது. 200க்கு, 115க்கு மேல் எடுத்தவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், பொதுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளித்துள்ளதால், தமிழக மாணவர்கள் பின்தங்கி விட்டனர். எனவே, பயிற்சி முறையை, மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டாம் தாளான சிந்தனைத் திறன் மற்றும் மொழி அறிவுத் திறனுக்கு, 2014 வரை, அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது. இப்போது, பொதுப்பாடத்துக்கு அதிக மதிப்பெண்; சிந்தனைத் திறன் தேர்வில், தேர்ச்சி அடைந்தால் போதும் என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:பொறியியல் மாணவர்கள் தான், சிவில் சர்வீசஸ் தேர்வில், அதிக தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை மாற வேண்டும். கலை, அறிவியல் படிப்பு களின் தரம்; பாடத்திட்டம்; கற்பித்தல் முறை யில் மாற்றம் செய்ய வேண்டும்.
வாரந்தோறும் பகுப்பாய்வு கொண்ட, சிந்தனைத் திறன் வகுப்பு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கணித கேள்விகள் அதிகம்:
அப்போலோ படிப்பு மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வர் கூறியதாவது:தமிழகத்தில், பொது நுழைவுத் தேர்வு போன்ற சிந்தனைத் திறன் தேர்வுகள் இல்லை என்பதால், தேசிய அளவில் மாணவர்களால், போட்டியிட முடியவில்லை. சிவில் சர்வீசஸ் தேர்வில், 'சிசாட்' என்ற சிந்தனைத் திறன் தேர்வில், கணித கேள்விகள் அதிகம். அதில் பொறியியல் மாணவர்கள், அதிகமாக தேர்ச்சி பெறுகின்றனர்; மற்ற மாணவர்கள் திணறுகின்றனர். மேலும், விடை திருத்த முறையும் மாறி விட்டதால், தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதன்மை தேர்வு: 19 முதல் பயிற்சி :
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், டிச., 18ல், முதன்மைத் தேர்வு நடக்கிறது. குறுகிய காலமே இருப்பதால், அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையத்தில், 19ம் தேதி முதல் பயிற்சி துவங்குகிறது.
இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். 16 அல்லது, 17ம் தேதிக்குள், மாணவர் சேர்க்கை முடிக்கப்படும். இங்கு, 225 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிற்சி காலத்தில், கட்டணமில்லா விடுதி, உணவு வசதி உண்டு. மாதம், 3,000 ரூபாய் உதவித் தொகையும், தமிழக அரசால் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை, 044 - 2462 1475 என்ற எண்ணில், அல்லது www.civilservicecoaching.com இணையதளத்தில் பெறலாம்.
No comments:
Post a Comment