ஆசிரியர் போராட்டத்திற்கு அரசு செவிமடுக்காமல் இருந்தால் இன்னும் தங்களுடைய போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 2,00,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு அடையாள வேலை நிறுத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
சேலத்தில் இந்த போராட்டத்திற்கு வகுப்புகளை புறக்கணித்து விட்டு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு பதாகைகளை உயர்த்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பாரியும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சந்திரசேகரும் தலைமை தாங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் முருகேசன், “ சி.பி.எஸ்., என்கிற தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கி ஜி.பி.எஃப்., திரும்ப கொண்டுவர வேண்டும். சம்பளத்தில் 10% ஊழியர்களும் 10% அரசும் செலுத்தி அந்த பணத்தை எங்கே போடுகிறார்கள் என்று கூட தெரிவதில்லை.
அதில் லோன் கூட வாங்க முடியவில்லை. ஓய்வுபெறும் காலத் தில் இந்த பிடிக்கப்பட்ட பணத்தை இது நாள் வரை தரவும் இல்லை. இந்த திட்டத்தின் கீழ் பணம் பிடிக்கப்பட்ட 88 பேர் ஓய்வு பெற்று இறந்தே விட்டார்கள். பிடிக்கப்பட்ட தொகை அரசு தரவில்லை. அதனால் இந்த திட்டத்தை நீக்க வேண்டும். பழைய முறைப்படி பென்ஷன் திட்டம் கொண்டு வர வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ தமிழகத்தில் எத்தனையோ துறைகள் இருக்கிறது. அந்தந்த துறைகள் சார்ந்து பணிகள் அதே துறையை சேர்ந்தவர்களுக்கு கொடுக்காமல் ஆசிரியர்களுக்கே அனைத்துத் துறை வேலைகளையும் கொடுக்கிறார் கள். அரசில் 14 நலத்திட்ட உதவிகளை எங்களை கொடுக்க சொல்கிறார்கள்.
குழந்தைகளுக்கு செருப்பு கொடுப்பது முதல் அவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வாங்கி கொடுக்கும் வரை எங்களுடைய பணிகளாக இருந்து வருகிறது.
இதனால் கல்விப் பணி பாதிக்கப்படுகிறது. தேர்வில் எங்களுக்கு 100% தேர்ச்சி காட்டச் சொல்லுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. கிராமப்புறங்களில் பணியாற் றும் ஆசியர்களுக்கு மாணவர்களின் தவறுகளை கேட்டால் ஆசிரியர் அடிக்கிறார் என்று புகார் கூறுகிறார்கள்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் எங்களுக்கும் கொடுக்க வேண்டும். இவைகள் உட்பட ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கிட வேண்டும் என்பதோடு தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய்மொழியாகியத் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்திட வேண்டும் ” என்றார்.
இந்த போராட்டத்திற்கு பிறகும் அரசு செவிமடுக்காமல் இருந்தால் அதன் பிறகு இன்னும் எங்களுடைய போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கும் என்றனர் அடுத்து பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.
தமிழகத்தில் கல்வி நிலை ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில் போராட்டங்களும் பணிப்புறக்கணிப்பும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் உள்ளது. அரசும் ஆசிரியர்களும் சிந்திக்கவேண்டும்.
வீ.கே.ரமேஷ்
விகடன்
No comments:
Post a Comment