மத்திய அரசு, இனி இளநிலை பணி இடங்களுக்கு நியமனங்கள் செய்கிறபோது நேர்முகத்தேர்வு நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளது. இது ஜனவரி 1–ந் தேதி புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய முறையின்கீழ், திறனறி தேர்வு, உடல்தகுதி தேர்வு மட்டுமே நடத்தப்படும். இதன்மூலமாகத்தான் தேர்வர்கள் தங்கள் திறனை, தகுதியை நிரூபித்துக்காட்டவேண்டும். அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
ஏதாவது ஒரு துறையில் நேர்முகத்தேர்வு கண்டிப்பாக தேவை என கருதினால் இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
பணி நியமனங்களில் நேர்முகத்தேர்வின்போது சிபாரிசுகளுக்கு இடம் தந்து, சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை அளித்து விடுவதை தவிர்க்க இந்த முறை உதவும் என கருதப்படுகிறது.
சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ‘‘பணி நியமனங்கள் இனி தகுதியின் அடிப்படையில் நடைபெறும். பரிந்துரைகளின்படி அல்ல’’ என கூறியது, இப்போது செயலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment