அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 8-இல் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவேன். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததையடுத்து 28 சங்கங்களை ஒருங்கிணைத்து ஜேக்டோ (தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) அமைப்பை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
தொடர்ச்சியாக, அக்டோபர் 8ஆம் தேதி அனைத்து சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.
இந்தப் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டை முற்றுகை, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் குடும்பத்தினரின் சுமார் 2 கோடி வாக்குகள் ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்றார் மீனாட்சிசுந்தரம்.
No comments:
Post a Comment