செய்யூரில், பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரால், பிளஸ் 2 மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகள் கவுசல்யா, 17. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் உள்ள, தன் பாட்டி வீட்டில் தங்கி, நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பயின்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை, 7:30 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கவுசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொள்ளும் முன், பள்ளி தலைமை ஆசிரியருக்கு கவுசல்யா எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை, அவரது உறவினர்கள் கைப்பற்றி உள்ளனர். அதில், பள்ளி ஆசிரியர் ஒருவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக, கவுசல்யா புகார் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், கிராம வாசிகளும், மதுராந்தகம் சாலையில் கவுசல்யா சடலத்துடன் மறியல் செய்தனர்.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், அங்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவில்லை.தொடர்ந்து, பிற்பகல், 1:00 மணியளவில், மதுராந்தகம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், கிராம வாசிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.போராட்டம் காரணமாக, மதுராந்தகம் சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக, நல்லூர் கூட்டுச்சாலையிலும், கிராம வாசிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாலியல் தொந்தரவு காரணமாக, மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கைது; 'சஸ்பெண்ட்'
மாணவி கவுசல்யா தற்கொலை தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன் விசாரணை நடத்தினார்.போலீசாரும் விசாரணை நடத்தி, வடக்கு செய்யூரைச் சேர்ந்த, ஆசிரியர் ரமேஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், ரமேஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடிதத்தில் இருப்பது என்ன?
கவுசல்யா தற்கொலை தொடர்பாக, அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலை செய்து கொள்ளும் முன், கவுசல்யா அலை பேசியில் அழைப்பு வந்ததாகவும், அதனால், அவர் அழுதபடி இருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் முன், பள்ளி தலைமை ஆசிரியருக்கு கவுசல்யா எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், 'விலங்கியல் ஆசிரியரான ரமேஷ் கொடுத்த பாலியல் தொந்தரவால் தான், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' எனத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தை, போலீசாரிடம் அவரது உறவினர்கள்
ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment