Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 15, 2015

    குறுக்கு வழியாக வருகிறது குலத்தொழில் தர்மம்? அ. குமரேசன்

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்” என்பது உள்பட, குழந்தைகள் தொடர்பாக நம்மிடம் புழக்கத்தில் இருக்கிற பழமொழிகளையும் பொன்மொழிகளையும் தொகுத்தால் பெரியதொரு புத்தகமாகவே வரும். இருப்பதாகக் கற்பிக்கப்படுகிற தெய்வத்தைக் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும் ஒன்றுதான்.
    ஆனால் கண்முன் இருக்கிற குழந்தைகளைக் கொண்டாடாமல் விட்டாலும் கேடில்லை, ஆனால் குதறாமல் விடுவதுதான் குழந்தை உரிமைகள் தொடர்பான இன்றைய உலகளாவிய சிந்தனைகளுக்கு மரியாதையளிப்பதாக இருக்கும்.

    ஏற்கெனவே குழந்தைகள் தினத்தன்று பள்ளிகுழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்டத்தில் கொதிநீரை ஊற்றி, குதறல் வேலையைத் தொடங்கியவர்களான மத்திய ஆட்சியாளர்கள், இப்போது குழந்தைகளைக் கொட்டடியில் அடைக்க வழிவகுக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் “குடும்பத் தொழில்களில்” வேலை செய்ய வைக்கப்பட்டால், அது குழந்தைகளை வேலை வாங்குவதாகாது என்பதே அந்த முடிவு.

    அதற்கேற்ப குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவுக்கு, அடுத்த சுற்று வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதனன்று (மே 13) கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது அவ்வாறு உழைப்பில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கு இனி இந்தச்சட்டம் பாதுகாப்பாக வராது.குடும்ப நிறுவனங்கள் அல்லாமல் பிற நிறுவனங்களில் சட்ட விதிகளை மீறிக் குழந்தைளை ஈடுபடுத்துவோருக்கான தண்டணைத் தொகை 20,000 என்பதிலிருந்து 50,000 ரூபாயாக அதிகரிப்பு, இரண்டாவது முறையாகக் குற்றம் செய்கிறவருக்கு மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கத்தக்க சிறைவாசம் என சில தண்டனைகள் கடுமையாக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், ஆபத்தில்லாத குடும்ப நிறுவன வேலைகளில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தலாம் என்ற அனுமதியே ஆபத்தானது.ஊழலின் தாராளமய நர்த்தனச் சூழலில், எவ்வளவு ஆபத்தான வேலைகளையும் ஆபத்தில்லா வேலைகளாகப் பதிவு செய்வது கடினமா என்ன?எப்படிப்பார்த்தாலும் இது தப்பான சட்டத் திருத்தம்தான். 18 வயது நிரம்பும் வரையில் குழந்தைப் பருவத்தினரே என்று ஐ.நா. குழந்தை உரிமைகள் மாநாட்டுப் பிரகடனம் சொல்கிறது. இதன் பொருள், குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும், பாதுகாப்புகளும் 18 வயது வரையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். குழந்தைகளுக்கு எதிரான எல்லாவகையான அத்துமீறல்களிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது தான். இந்தியா இந்தப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்கிறபோது, ஏற்கெனவே இங்கிருக்கிற சட்டங்களில் சீரான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால், பல்வேறு வகையான “ஆபத்தில்லாத” தொழில்களில் 14 வயதுக்கு மேற்பட்டோரை ஈடுபடுத்தலாம் என்று அனுமதிக்கும் சட்டம் உள்ளிட்ட முரண்பாடுகள் அப்படியேதான் நீடிக்கின்றன. 18 வகையான ஆபத்தான வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதைப் பயன்படுத்தி பல முதலாளிகள் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 26 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது இப்படிப்பட்ட சட்டங்களின் துணையோடுதான்.எல்லா வகையான வேலைகளிலும் 18 வயது வரை உள்ளவர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை குழந்தை உரிமை இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் என பல முனைகளிலிருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தில், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 18 வயது வரையில் எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவச கல்வி பெறும் உரிமையை உறுதிப்படுத்துவதோடும் இது இணைய வேண்டும் என்ற முழக்கமும் ஒலிக்கிறது.அதையெல்லாம் இந்த அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை என்பது போக, இருக்கிற பாதுகாப்பையும் அல்லவா விலக்குகிறது! குடும்ப நிறுவனங்கள் என்றால் பெற்றோரின் சொந்தக் குழந்தைகளுக்கு மட்டுமா, சொந்தக்காரக் குழந்தைகளுக்கும் சேர்த்தா? பொதுவாக ஒரு நிர்வாகம் தனது அதிகாரிகள் ஊழியர்கள் எல்லோரையும் சேர்த்து “எங்கள் குடும்பம்” என்று சொல்லிக்கொள்வது வழக்கம். இனி குழந்தை உழைப்பைச் சுரண்டுவதில் கூச்சமற்ற நிர்வாகங்கள், “நாங்க ஒரே குடும்பமாக்கும்” என்று சொல்லிக்கொள்வார்களே!அண்மையில்தான், கடும் குற்றங்களில் ஈடுபட நேரிடுகிற 16 வயதுக்கு மேற்பட்டோரை, சிறார் நீதிச் சட்டத்தின் அரவணைப்பிலிருந்து வெளியேற்றி, வழக்கமான தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஒரு சட்டச்சீர்குலைவுக்கு முடிவெடுத்தார்கள். உளவியல் புரிதலின்றி, சமூக அறிவியல் பார்வையின்றி, உணர்ச்சி அரசியலை அறுவடை செய்கிற உள்நோக்கம் அந்தச் சீர்குலைவின் பின்னணியில் உண்டு.அதற்குப் பெரும் எதிர்ப்பில்லை என்று நினைத்தோ, அல்லது எதிர்ப்புகளை வேறு சர்ச்சைகளில் திசைதிருப்பலாம் என்ற மிதப்பிலிருந்தோ இப்போது இந்த முடிவு. ஒரு பக்கம் இது குழந்தைத் தொழிலாளர் நியமனங்களுக்கு சுற்றி வளைத்து சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது. குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் களவாடி ஒளித்துவைக்க இண்டு இடுக்குகளை உண்டாக்கித் தருகிறது. வயது வந்த தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்க வழிசெய்கிறது. “குடும்ப நிறுவனம்” என்கிறபோது அங்கே தொழிற்சங்கமாவது, கோரிக்கையாவது!எல்லாவற்றையும் விட கவலைக்குரிய ஒன்று - “குலத்தொழில் கல்லாமல் பாகம்படும்” என்ற நியதி மறைமுகமாகப் புகுத்தப்படுகிறது.

    ஒருவர் தன் பெற்றோரது தொழிலை தானும் விரும்பிக் கற்றுக்கொண்டு அதில் ஈடுபடுவது என்பது அவருடைய உரிமை. ஆனால் அதுவே குழந்தை ஈடுபட்டாக வேண்டிய கட்டாயமாகத் திணிக்கப்படுவது கொடுமை. இந்திய சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்திய குலக்கல்வி முறைக்கு நீண்ட போராட்டங்கள் முற்றுப்புள்ளி வைத்தன. இன்று குழந்தை உழைப்பைச் சுரண்டுவதற்கென குடும்ப நிறுவன ஒப்பனையோடு நிறுத்தப்படும் நவீன குலத்தொழில் வர்ணாஸ்மரத்தையும் புதிய போராட்டங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

    No comments: