சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாணவரும் தலா, 33 சதவீத மதிப்பெண், செய்முறை மற்றும் தியரி தேர்வுகளில் பெற்றால் தான், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்றனர். இத்தேர்வில், பாட வாரியாக, மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனியே கிரேடு முறை வழங்கப்படுகிறது. ஆங்கில எழுத்துக்களில், 'ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1, டி2, இ' என, ஒன்பது வகை கிரேடு முறை வழங்கப்படுகிறது.
இந்த கிரேடு முறையில், டி2க்குக் கீழ், இ கிரேடு பெற்றால், அவர் தேர்ச்சி பெறாதவர் ஆவார். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர், ஒரு மாத இடைவெளியில் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர், மீண்டும் அடுத்த ஆண்டுத் தேர்வில், அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதை மீண்டும் எழுதத் தேவையில்லை. பழைய மதிப்பெண்ணே கணக்கில் எடுக்கப்படும். இல்லையென்றால், செய்முறை மற்றும் 'தியரி' தேர்வு இரண்டையும் மீண்டும் அடுத்த கல்வி ஆண்டில் எழுத வேண்டும். மதிப்பெண் பட்டியலுக்கான சான்றிதழில், பாடவாரியாக மதிப்பெண் மற்றும் தனியாக கிரேடு குறிக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஜி., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?
சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் கணிதத்துக்கு, 100; இயற்பியல், வேதியியலுக்கு தலா, 50 மதிப்பெண் கணக்கிடப்பட்டு, மொத்தம், 200க்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்கள் கணிதத்தில், 100க்கு பெற்ற மதிப்பெண் அப்படியே எடுத்துக் கொள்ளப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில், அவர்கள், 100க்கு எடுத்த மதிப்பெண், தலா, 50க்கு என கணக்கிடப்படும் என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment