ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை. அனைவருக்கும் உரிய, உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம், மன வளம், கற்கும் திறன், தனியாள் வேற்றுமை, அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் உருவாக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டத்தை நாடு முழுமைக்கும் மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய அறிவுறுத்துவதும், எதிர்நோக்குவதும் தவறானவை. எல்லோருக்குமான இலவச, கட்டாய, சமச்சீர் பொதுக் கல்வி முறையில் தக்க திருத்தம் மேற்கொள்வது அவசியம்.
போதிய கட்டடம், காற்றோட்டமிக்க வகுப்பறை, துடிப்பு மிகுந்த மாணவர்கள், குறைபாடிருப்பினும் காண்போர் கவனத்தை ஈர்க்கும் பாட நூல்கள், சிறந்த கற்றல் - கற்பித்தல் கருவிகள், நல்ல சூழல் அனைத்தும் இருந்தும் என்ன பயன்? தகுதியும், திறமையும் ஒருங்கே நிறைந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியேற்ற ஆசிரியர்களை அரசே பணிபுரிய விடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்?
கல்வித் துறை சாராத பிற துறைகளில் பணிபுரிவோருக்கு அவரவர் சார்ந்த துறைகளில் மட்டுமே முழுக் கவனமும் துறைசார் வேலைகளும் இருக்கும்.
அதேசமயம், ஏழை, எளிய குழந்தைகளைக் கடைத்தேற்றும் தலையாயப் பணிபுரிந்திடும் ஆசிரியச் சமூகத்தினருக்குப் பிற துறையினர் தரும் நெருக்குதல்கள் சொல்லி மாளாதவை.
புள்ளியியல் துறை சார்ந்த பொருளாதாரம், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்ந்த ஜாதிச் சான்று உள்ளிட்ட மூவகைச் சான்றுகளுக்கான முன்னேற்பாடுகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்துதல், வாக்கு எண்ணிக்கை, பள்ளிக் கட்டடம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், சுற்றுச்சுவர், பராமரிப்புப் பணிகள், பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி, மேஜை முதலான பொருள்கள் வாங்குதல், பாதுகாத்தல் மட்டுமன்றி இவை குறித்த பதிவேடுகளையும், ரசீதுகளையும் முறையாகப் பராமரித்து பல்வேறு உள்ளூர், வெளியூர் தணிக்கைகளுக்குத் தக்க ஒத்துழைப்பு வழங்குதல் என்பவை தக்கச் சான்றுகளாகும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், ஆதிதிராவிடர், மாற்றுத் திறனாளிகள், பீடித் தொழிலாளர்கள், மனிதக் கழிவைச் சுத்தம் செய்வோரின் குழந்தைகள் ஆகியோரின் நலத் துறை சார்ந்த உதவித் தொகைகள், நலத் திட்டங்கள் முதலானவற்றை முறையாகப் பெற்று உரியவர்களிடம் சேர்ப்பித்தலும் ஆசிரியரின் கூடுதல் வேலைகளாகும்.
இவையனைத்தும் ஒழுங்காக ஈடேறிட அஞ்சலகங்கள், வங்கிகளில் பெற்றோர் அல்லது மாணவர் பெயரில் கணக்குத் தொடங்கித் தருவதும் அந்தப் புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதும் முக்கியமானவை.
அஞ்சல் துறை சார்ந்த வளரும் மாணவர் சேமிப்புத் திட்டம், சிறுசேமிப்பு ஆகியவற்றைத் திறம்பட, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களிடம் இயக்கமாகக் கொண்டு சென்று சேமிப்புப் பழக்கத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைத்தல் மிகுந்த சிரமம் தரும் பணியாகும்.
மின் கட்டணம், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, டி.வி.டி. சாதனம் முதலிய நவீன கற்றல், கற்பித்தலுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவிகள் பழுதுநீக்கம், பள்ளிச் சிறார் நலத் திட்டம் சார்பில் பயனாளர் அட்டை எழுதுதல், பதிவேடு பராமரிப்பு வேண்டும்.
தவிர, அயோடின் சத்துக் குறைபாடு கண்டறிதல், பார்வைக் குறைபாடு கண்டறிதல், குறைநிவர்த்திக் கண்ணாடி பெற்று வழங்குதல், பதின்பருவச் சிறுமிகளுக்கு மாதவிடாய் கால நவீன பாதுகாப்பு உபகரணம் அளித்தல், சத்துணவு மேற்பார்வை, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், இலவசப் பேருந்துப் பயண அட்டை பெற்றுத் தருதல் உள்ளிட்ட வேலைகளும் அடக்கம்.
ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படும் பள்ளிப் பிள்ளைகளுக்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், எழுது பொருள்கள், கணித உபகரணங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை அனைவருக்கும் சரியாகப் பங்கிட்டுக் கொடுத்தல் என்பது ஆசிரியர்களுக்கு இலகுவான வேலையல்ல.
உயர் அலுவலர்களால் கோரப்படும் பல்வேறு புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தித் தயாரித்துக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்கு உலக ஆசைகள் அற்றுவிடும் எனலாம்.
தவிர, ஆசிரியர்கள் பலரைக் கல்வி அலுவலர்கள் தத்தம் எடுபிடிகளாகவும், வாகன ஓட்டிகளாகவும் உருமாற்றி வைத்துள்ள போக்குகள் களையப்பட வேண்டியவை.
ஆசிரியர்களின் நிலை இப்படி இருக்கையில், ஒவ்வோர் ஊதியக் குழுவிலும் பரிந்துரைத்ததற்கு மாறாக நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய ஊதியத்தை வழங்க மறுப்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே வாடிக்கையாக உள்ளது.
மத்திய அரசு ஆசிரியரின் ஊதியத்தைவிட மாநில அரசு ஆசிரியரின் ஊதியம் குறைவாகும். ஊதிய முரண்பாடுகள் காலத்தில் களையப் பெற்று நிவர்த்தி செய்வது அரசின் தலையாயப் பணியாகும்.
பகுதிநேரப் பணியாக அல்லாமல் முழு நேரமும் ஆசிரியப் பணி மட்டுமே செய்தால்தான் இளைய சமுதாயம் நலம் பெறும்.
1 comment:
Admin sir you are saying cent percent truth. Trs spent their lot of working and night times to prepare free scheme work with heavy mind pressure.
Post a Comment