மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு பேசுகையில், தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் தலைசிறந்த தனியார் கல்வி நிறுவனங்களிலும் பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்குவதில்லை. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கட்டாயமாக நடவடிக்கை எடுப்பார் என்றார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை 25 சதவீதம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ரூ.97 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் ஒதுக்கீடு செய்தார்.
எனவே, எந்தவொரு தனியார் பள்ளியாவது இந்தச் சட்டத்தின்படி, மாணவர்களைச் சேர்க்க மறுத்தால் அந்த பள்ளி மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment